Thursday, July 17, 2014

நானும் நதியா சைக்கிளும்

என் தம்பி மதுவிற்கு பிடித்த கிரகம்:

எட்டாப்பு படிக்கும் போது நான் சைக்கிள் ஓட்ட என் தம்பி எனக்கு கத்து கொடுத்தான். அப்ப அவனுக்கு கிரகம் சரியில்லை போல. என் அப்பாவின் சைக்கிளிலே கத்துக்கிட்டேன்.  ஓட்டும் போது கூடவே ஓடி வரும் என் தம்பி மீது சைக்கிள் விழும். அவன் எடுத்து நேராக்குவான்.  ஆனா ஒரு வாட்டி கூட நான் கீழே விழுந்தது இல்லை. சைக்கிளை கீழே போட்டுட்டு அப்படியே நேரா நிற்பேன். இது எப்படின்னு என் தம்பி குழம்பி போவான். ஆனாலும் கூடவே ஓடி வருவான்.அப்புறம் தனியே ஓட்டும் போது ஏதேனும் ஒரு மேட்டில் இடதுக்காலை வைத்துக் கொண்டே இருந்து விட்டு வலதுக்காலில் பெடல் செய்துதான் இடதுக்காலை எடுத்து அதன் பிறகு செமையா ஹேண்ட்பாரை ஆட்டி ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருதுன்னு அளப்பரை செய்துட்டு அதன் பிறகு ஒரு ஒழுங்காய் ஓட்ட வரும். எங்காச்சும் சைக்கிள் நின்று விட்டால் அட்லீஸ்ட் ஒரு கல் ஏதுவாக இடதுப்பக்கம் இருக்கும் பகுதிக்கு சைக்கிளை தள்ளிக் கொண்டே சென்று தான் ஓட்ட ஆரம்பிப்பேன். சொந்தமாக எனக்கே எனக்குன்னு ஒரு சைக்கிள் வாங்கி தரமாட்டாங்களான்னு ரொம்ப ஆசையாய் இருக்கும். ஆனா  ஓட்டுற லட்சணத்திற்கு அது ரொம்ப ஓவருனு கேட்டதே இல்லை. ஸ்கூலிங்  முடியும் வரை யாரோ ஒருவர் இருவரை பெண்களுக்கான சைக்கிளில் வயிறு எறிய பார்த்துட்டு போய்டுவேன்.

என் அப்பாவிற்கு பிடித்த கிரகம்:

காலேஜ் படிக்கும் போது நதியாவின் பூவே பூச்சூடவா படம் வந்தது. அப்பவே அந்த படத்தை மூணுவாட்டி எங்க ஊரு பூர்ணகலா தியேட்டரில் பார்த்தேன். சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதான்னு நதியா சைக்கிள் ஓட்டி வந்ததை பார்த்ததும் அது வரை தூங்கி கொண்டிருந்த சைக்கிள் ஆசை திரும்ப வந்தது. காலேஜிற்கு நிறைய பேர் சைக்கிளில் வருவதை பார்த்துட்டு அது வெறியா மாறிச்சு. என் க்ளாசில் ராஜி மற்றும் இந்திரா தினமும் லேடிஸ் சைக்கிளில் தான் காலேஜ் வருவார்கள்.  அவுங்க சைக்கிளை ஓசி அடிச்சு காலேஜ் கிரவுண்டில் நதியா கம்மல் போட்டு, சுடிதாரில்  லா லா லால்லாஆஆஆ . மாலையில் NGO - காலனியில் க்குக்குகூகூ கூ கூ. அப்புறமா வந்த பூக்களை பறிக்காதீர்களிலும் நதியா சைக்கிளில் வருவார். எனக்கு பைத்தியம் முத்திடுச்சு. ஓட்டி கொண்டிருக்கும் போது இரண்டு காலையும் அப்படியே லூசில் விட்டு சடாரென்று சைக்கிளை நிறுத்துவது,இடது காலுக்கு கல் இல்லாமலேயே அப்படியே பெடல் செய்து வண்டி ஸ்டார்ட் செய்வது, அப்படியே U-Turn போடுவதுன்னு கடைசி 2 வருடங்களில் நதியா ஸ்டைல் செய்ய இன்னும் சில பல ஓசி சைக்கிள்கள் கிடைத்தன.  அச்சோ,ஸ்பீடா போறப்போ அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருக்கும்.அப்பா டீச்சரா இருந்ததால் சென்னைக்கு பேப்பர் கரெக்‌ஷன், மீட்டிங்குன்னு போறப்ப அந்த மொத்த காசுக்கும் நதியா கம்மல்,நெல்லையில் அப்ப கிடைக்காத சுடிதார் (சென்னையில் வாங்கி வர சொல்லி) என் அப்பா காசிற்கு வேட்டு வைத்தேன்.மிச்ச காசில் ஒவ்வொரு வருடமும் ரிலீசாகும் நதியா படங்களை இரண்டு மூணுவாட்டி பார்ப்பேன்.

எனக்கு பிடிச்ச கிரகம்:
அதன் பிறகு PG படித்த காலேஜில் கட்டாயம் Saree கட்ட வேண்டும் நதியா பைத்தியமும் ஓய்ந்தது. எனவே சைக்கிள் ஆசையினை மறந்து இருந்தேன். அப்புறம் கல்யாணம் ஆச்சு. எனக்கு பிடிச்ச கிரகத்தின் வேலை அப்படி. நெல்லையினை விட்டு தாம்பரம் ரயில்வே காலனியில் குடித்தனம். சைக்கிள் ஓட்ட நிறைய இடம் இருக்கும், ஆனா சைக்கிள் தான் இல்லை.


மகனுக்கு பிடித்த கிரகம்:

என் மகன் நகுலுக்கு மூன்று வயதானதும் அவனை LKG சேர்த்த ஸ்கூலில் நானும்  டீச்சராக வேலைக்கு சேர்ந்தேன். அப்ப தான் என் மகனுக்கு பிடிச்ச கிரகம் சைக்கிள் வாங்க வைத்தது. Neelam- கம்பெனி சைக்கிள் கொஞ்சம் உயரம் கம்மியாக இருந்தது. எனவே அந்த சைக்கிள் வாங்கலாம் என்று முடிவு செய்து அதையே 650 ரூபாய்க்கு என் முதல் மாத சம்பளத்தில் வாங்கினேன். மொத்த சம்பளமே அவ்ளோ தான்!!!.ஹை சொந்தமாக நமக்கே நமக்கான சைக்கிள் என்று அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. என் மகனை  பின் சீட்டில் வைத்துக் கொண்டு நதியா ஸ்டைல் எதுவும் செய்யாமல் பத்திரமாக ஸ்கூலிற்கு போய் வந்தேன்.

 சைக்கிள் வாங்கிய,ஓட்டிய சந்தோஷம் போல வீட்டில் டூவீலர் வாங்கிய போதோ, என் மகன் கார் வாங்கிய போதோ எனக்கு வரலை.


6 comments:

Unknown said...

#சைக்கிள் வாங்கிய,ஓட்டிய சந்தோஷம் போல வீட்டில் டூவீலர் வாங்கிய போதோ, என் மகன் கார் வாங்கிய போதோ எனக்கு வரலை#
சந்தோசம் தானே ,அடுத்து ஹெலிகாப்டர் வாங்கும் போது வரும் (ஆனா வராதா?)

ராஜி said...

சைக்கிள் பழக ஆரம்பிக்கும்போது கீழ விழுந்து முட்டிக்கால் பெயர்த்துக்கிட்ட போதே சைக்கிள் ஆசையை விட்டுட்டேன். அப்படியே நான் சைக்கிள் ஓட்டனும்ன்னு ஆசைப்பட்டா பெரிய மனிதர்கள் கார் முன்னே எஸ்கார்ட் வருவதுப்போல என் ஃப்ரெண்ட்ஸ்லாம் எனக்கு முன்னாடி போய் ரோட்டுல வழி உண்டாக்குவாங்க.

”தளிர் சுரேஷ்” said...

வாழ்க்கையில் முதன் முதலில் ஓட்டப்பழகும் வாகனம் சைக்கிள்! அதன் நினைவுகள் எப்போதும் சுவையானவை! பகிர்வுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொருத்தர் வாழ்விலும் இந்த சைக்கிள் அனுபவம் மறக்க முடியாதவை...

Anuprem said...

interesting........

arputharaju.blogspot.com said...

‘நானும் நதியா சைக்கிளும்... படித்தப்பிறகு இளம் வயதில் சைக்கிள் கற்றுக்கொண்ட நினைவுகளை கிளறி விட்டது... எனக்கும் அதைப்பற்றி எழுதும் ஆசையை தூண்டிவிட்டுள்ளது...
தம்பி, அப்பா, நீங்க மற்றும் உங்க மகனது கிரக நிலையுடன் சைக்கிள் ஓட்டியது அருமை...
“பூவே பூச்சுடவா” நதியாவின் பாதிப்பு பெண்களுக்குமா? அதுவும் சைக்கிள், கம்மல், சுடி என நிறைய பாதிப்புகள்தான்...
நிஜம்தான்... சைக்கிள் உண்டாக்கிய பாதிப்பு வேறு வாகனங்கள் ஏற்படுத்தவில்லை. அழகான பதிவு..!’