Tuesday, February 25, 2014

சூப்பர் கைப்புள்ள!!!

பார்றா...கைப்புள்ளயின் சாமர்த்தியத்தை......

போன முறை திநெவேலிக்கு போயிட்டு குழப்பத்தோடு திரும்பி வந்த கைப்புள்ள கூட்டணி திரும்பவும் இந்த மாதம் 13 விடிகாலையில் திநெவேலியில் எண்டர் ஆனது.

தச்சநல்லூர் தாண்டும் போது ரோட்டோரெமெல்லாம் வருக வருக என பேனர்கள்.ஆஹா திநெவேலியில் போன முறை யார்கிட்டேயும் பணம் எதுவும் கொடுத்து ஏற்பாடு செய்யலையே அப்புறமா எப்படி இவ்ளோ கட்-அவுட்,பேனர் என்று ஜெர்க்காகி கண்ணை கசக்கி கொண்டு நிமிர்ந்து நிதானமாக பாத்தாக்கா வருக வருக குலவிளக்கே,வருக வருக சித்தியே,வருக வருக வாணி ராணியே ஓஓ இது நமக்கில்லையா ராதிகா அம்மாக்கா என்று தூக்கம் நன்கு கலைந்ததும் புரிந்தது. பிப்ரவரி 16-ல் அங்கு நடக்க இருந்த மாநாட்டிற்கு சரத் குமார் கட்சிக்காரர்கள் வைத்திருந்த பேனர்கள்.

எண்டர் ஆகும் போதே என்ன ஒரு அமர்க்களம். வியாழன் காலையிலேயே அந்த வீட்டில் ஆஜராகிட்டோம். Mr.@#$% இல்லை. ஆனால் அவரின் மனைவி எங்களுக்கு ஃபேனை போட்டுட்டு அவருக்கு ஃபோனை போட அவரிடம் பேசினேன். கீழ் வீட்டை இன்னும் காலி செய்யலை எனவே ஞாயிற்று கிழமை மதியம் 2 மணிக்கு வந்தால் சாவியை தந்து விடுவதாக கூறினார். இன்னா சார் நீங்க சொல்லி தான் இன்று வந்தோம் இப்படி எங்களை அலைய விடுறீங்களே என்று எரிச்சலுடன் சொல்லிட்டு 4 நாளும் அங்கேயே டேரா போடுவதென்று முடிவு செய்து விட்டோம்.

அப்படியே இன்னொரு ஃப்ரண்டை நடுரோட்டில்  பார்த்துட்டு சாவி ஞாயிறன்று தரலைன்னா அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று டிஸ்கஸ் செய்தோம்.

மறுநாளும் வெள்ளியன்றும் அங்கே போனோம்.வீட்டை யாரோ விலைக்கு பார்க்க வருவதாக கூறி மாடியினை திறந்து வைத்து கொண்டு இன்னும் சில ஃப்ரெண்ட்ஸ்களை கூட்டி வந்து சத்தமாக சிரித்து சிரித்து பேசிட்டு அப்புறமா காந்திநகர் போனோம். இங்கு தான் எனக்கு இந்த ஃப்ரெண்ட் அறிமுகம் ஆனவர்.இருவரும் சேர்ந்து பழைய கதைகளை பேசிக் கொண்டே 25 வருடங்கள் கழித்து அங்கேயிருந்த ஒன்றிரண்டு தெரிந்த வீட்டிற்கு விசிட் செய்தோம்.

மறுநாள் ஸ்ரீவைகுண்டம் பஸ்ஸில் போய் அங்கிருந்து ரூபாய் 500 க்கு கிடைத்த ஆட்டோவில் நவதிருப்பதிக்கும் விசிட் செய்துட்டு மதியம் சூப்பரா ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பவும் ஃப்ரெண்டின் வீட்டிற்கு போனோம். Mr.@#$% -ன் மனைவியிடம் நாளை மதியம் கட்டாயம் வருவோம் சாவியினை கொடுத்து விடுங்கள் என்று மிரட்டலாக(???) சொல்லி விட்டு வந்தோம்.

மறுநாள் காலை “கதிர்வேலன் காதல்” பார்த்துவிட்டு லஞ்ச் சாப்பிட போனால் Mr.@#$% ஃபோன் செய்கிறார். மதியம் வர வேண்டாம். மாலை ராகு காலம் முடிஞ்சு 6 மணிக்கா வாங்கன்னு.சரியென்று ஃப்ரெண்ட் ஒருவரின் வீட்டில் மதியம் பேசிட்டே ரெஸ்ட் எடுத்துட்டு மாலை 6 மணிக்கு டாணென்று ஆஜரானோம்.

நாங்க 15,20 வருடங்களாக உங்க வீட்டிற்கு செய்த மராமத்து செலவு அது இது என்று ஒரு நீண்ட லிஸ்ட் எழுதி வைத்திருந்தார் Mr.@#$%. ஒவ்வொரு செலவுக்கும் எங்களிடம் வாடகையில் கழித்ததற்கு அவரே போட்ட 10 வருட லட்டர் எங்க கையில் இருந்தது.

இதெல்லாம் சரிப்படாதுங்க 15 வருடம் நீங்க கொடுத்த வாடகையினை இப்படி மொத்தமாக வசூலிக்கிறீங்க எங்களால் இவ்ளோ எல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்லவும்.பதிலுக்கு அவரும் எகிறினார். அப்புறம் இரு தரப்பும் சமாதானமாகி நாங்கள் சொன்ன தொகையினை அவரின் மனைவி ஏற்று கொண்டு Mr.@#$% டம் விடுங்க தானம் செய்ததாக நினைத்து கொள்ளலாம் என்று பெரிய மனதுடன்(???) சொன்னார்.

அடிங்ங்ங்ங்......யார் தானம் செய்றாங்க என்று மனதிற்குள் நினைத்து கொண்டு ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் இவ்ளோ பணம் ஒரு மாதத்திற்குள் தானமாக நாங்க தர்றோம்னு எழுதி கொடுத்துட்டு சாவியினை வாங்கி கொண்டு காத்திருந்த என் தோழரிடம் கொடுத்துட்டு 9 மணிக்கு சாப்பிடாமல் அவசர அவசரமாக சரத்க்குமார் மாநாடு முடிக்கும் முன்பு ஊரை விட்டு ஓடினா போதும் என்று சென்னை செல்லும் ஆம்னி பஸ்ஸில் சென்னைக்கு வெற்றிகரமாக வந்தோம்.

Tuesday, February 04, 2014

கைப்புள்ளயின் திநெவேலி பஞ்சாயத்து!!!


கைப்புள்ளயின் ஃப்ரெண்ட் ஒருவரின் கணவர் ஒன்றரை வருடங்கள் முன்பு வேலை பார்த்த தனியார் நிறுவனத்தில் மயக்கம் போட்டு விழுந்து பிறகு பக்கவாதம் வந்து உடனே மருத்துவம் பார்த்ததில் செயல் இழக்காமல் காப்பாற்ற பட்டு ஆனால், அந்நிறுவனம் இனிமேல் வேலைக்கு வேண்டாம் என்று கூறியதில் கிடைத்த அற்ப செட்டில்மெண்டில் வீட்டிலேயே இருக்கிறார். அவர் படித்தது ICWAI..இந்த படிப்பை முடிக்க பலர் குட்டிக்கரணம் போட்டு கொண்டு இருக்கின்றனர். இவர் இந்த படிப்பை முடித்து இப்பொழுது சும்மா இருக்கிறார்.

அவரின் தந்தை 20 வருடங்களுக்கு முன்பு தன் திநெவேலி  வீட்டை Mr. @#$% க்கு வாடகைக்கு விட்டு இருக்கிறார். அவர் கொஞ்ச நாளில் அந்த வீட்டிற்கு பின்னால் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி அதில் 4 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு, இவர்களின் வீட்டையும் யாருக்கோ வாடைகைக்கு 2000 முதல் 5000 வரை விட்டு போனா போகுது இதுங்க பாவம்னு 500,750 என்று கொஞ்சம் கொஞ்சமாக வாடகை கூட்டி 2013 நவம்பரில் 1100 ரூபாய் வாடகை என்று மணியார்டர் அனுப்பி வந்திருக்கிறார்.
இவர்களும் நேரில் போய் பார்க்காமல் சொற்ப வாடகையினை வாங்கி கொண்டு அடக்கமாக இருந்து கொண்டனர்.

தோழியின் கணவர் மிகுந்த பயந்த சுபாவம். அது அந்த Mr.@#$% - க்கு மிகுந்த தகிரியத்தை தர  உடல் நிலை சரியில்லாதவரை பார்க்க வந்தது போல்  சென்னை வந்து குட் இப்படியே இருந்துகோங்கோ அதை விட்டுட்டு தெற்கே தலை வச்சா தலை இருக்காது, நான் தர பணத்தை வாங்கிட்டு எனக்கே அந்த வீட்டை எழுதி கொடுங்கன்னு  பாசமாக மிரட்டி சென்று உள்ளார்.

தோழியின் குடும்பமும் அந்த பாசத்துக்கு அடிமையாகி சைலண்டாக இருந்து விட்டனர். அப்படியே பொழுதும் போச்சா கம்பெனி செட்டில்மெண்ட் பணம் காலியானவுடன்  படிக்கும் இரு குழந்தைகளை வச்சுக்கிட்டு அடுத்த மாதம் புவ்வாக்கு என்ன செய்வது என்ற கிலி வந்தவுடன் தோழிக்கு கைப்புள்ளயின் நினைவு வந்துருச்சு.

இப்படி இப்படி ஆச்சு இப்ப என்ன செய்றதுன்னு கைப்புள்ளகிட்ட சொல்ல எடுறா வண்டியை நேரா தெற்கே போய் தலையை வச்சுபுடுவோம் அந்த பாசக்கார Mr. @#$% -ஐ சந்திச்சுப்புடுவோம் என்று சென்னையிலிருந்து போன மாதம் வண்டி கிளம்பிடுச்சு. தலை தப்புச்சுன்னா வடக்கே ஓடி வந்துடுலாம்னு ஒரு நப்பாசை. கைப்புள்ள, தோழி அவரின் இரு கல்லூரி படிக்கும் குழந்தைகளுடன்(கைப்புள்ளயின் அடியாட்களே இவர்கள்!!!) திநெவேலியில் ஆஜர்.

கைப்புள்ள என்னதான் தகிரியமா இருந்தாலும் உள்ளுக்குள்ளே வெடவெடன்னு தானே இருக்கும். போய் இறங்கியதும் ஆத்தா பேராட்சி, அம்மா காந்திமதி, நடுவுல உச்சிமாளி என்று நேரில் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு கொஞ்சூண்டு தகிரியத்தை தேத்திக்கிட்டு நேரே தோழியின் அந்த அரத பழசு வீட்டிற்கு ஆஜராகியாச்சு.

போனா Mr. @#$% மனைவி மட்டுமே அவர்களின் வீட்டில் இருந்தார். தோழியின் வீடு கீழே, மேலே என்று பூட்டி இருந்தது. அந்த அம்மா  கைப்புள்ளய பார்த்த நடுக்கத்தில்(எப்பூடி) மேல் வூட்டு சாவி மட்டும் இருக்கு இந்தாங்க என்று உடனே கொடுத்து விட்டது. என்னடா இது வந்த உடனே சாவியான்னு கைப்பிள்ளக்கு செம குழப்பம். கைப்புள்ளைக்கும் வேலையில்லை கூடவே வந்த அடியாட்களும் வேலையில்லை!!!. கீழ் வூட்டு சாவியில்லை அதில் குடியிருப்பவர் வெளியூர் போயிருக்கிறார். அவர் திரும்ப வர 10 நாட்கள் ஆகும்னு அந்தம்மா சொல்லிடுச்சு. சரிங்க உங்க வீட்டுகாரரை பார்க்கணும் என்று சொன்னதும் அவர் மதியம் சாப்பிட 1 மணிக்கு வருவார் அப்ப வாங்கண்ணு சொல்லிட்டாங்க.

சரியென்று அந்த மாடியில் கொஞ்ச நேரம் தூசிகளுக்கு நடுவில் இருந்துட்டு மதியம் சாப்பிட போனா அந்த கேப்பில் Mr.@#$%  எஸ் ஆகிடுவார்ன்னு 3 மணிவரை காத்திருந்து பசியில் கைப்புள்ள க்ளூக்கோஸ் ஏத்துற நிலைமைக்கு போய் விட்டதால் ஓடி போய் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து வாசப் படியில் ஆஜராகியாச்சு.

3 மணி இப்ப 5 ஆச்சு  ஒரு உச்சா கூட போகாமல் காலை 9 மணியிலிருந்து ஐந்து மணிவரை தேவுடு காத்துட்டு அந்தம்மாக்கிட்ட கேட்டாக்கா அவரு ஒரு மீட்டிங் போயிட்டாரு.வர ராத்திரி 9ஆகும்னாங்க. அடியாத்தீ இதை முதல்லேயே சொல்லி இருந்தா பக்கத்து தியேட்டரில் வீரம் பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் வீரமா வந்திருப்போமேன்னு புலம்பிக்கிட்டே. சரிங்க நாளைக்கு காலையில் 8 மணிக்கு வர்றோம் Mr. @#$% எங்கேயும் போகவேணாம்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டு கைப்புள்ள க்ரூப் கிளம்புச்சு.

சும்மா கிளம்பலை திநெவேலியில கைப்புள்ள படிக்கும் போது கூட படித்த ஒரு தோழரிடம் விஷயம் இப்படி இப்படின்னு சொன்னதும் அந்த பாசக்கார ஃப்ரெண்ட் ஒரு பட்டாளத்துடன் அங்கே ஆஜராகி விட்டார். படியிலே உட்கார்ந்தே ஒரு அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டிவிட்டு கூட்டத்தை கலைத்து விட்டு கிளம்பியாச்சு.

மறுநாள் காலை 8 மணிக்கே அந்த வீட்டில் ஆஜர். Mr.@#$%  அவரின் மனைவியினை விட சாந்தமாக இருந்தார். இங்கே பாருங்க எனக்கு யார் வீட்டு சொத்தும் தேவையில்லை நான் நிறைய பணம் அந்த வீட்டிற்கு செலவு செய்துள்ளேன் அதை கணக்காய் எழுதி வைத்துள்ளேன். அதை செட்டில் செய்துட்டு உங்க சாவியினை வாங்கிகோங்க. கீழ் வீட்டு சாவி பிப்ரவரி 10-ல் தான் தர முடியும் அதில் நிறைய சாமன்கள் இருக்கு சாவி இப்ப என்கிட்ட இல்லை. நான் டூர் வேறு போறேன். எனவே, கீயை 10 ஆம் தேதி வந்து வாங்கிகோங்கன்னு சொல்லிட்டார்.

கைப்புள்ள+தோழிக்கு ஒன்னுமே புரியலை. இந்த அப்புராணியை நேரில் பார்க்க இம்பூட்டு பயந்தோமே இவரா சென்னை வந்து மிரட்டினதுன்னு ஒரே ஆச்சரியம். சரிங்க நாங்க 10-ஆம் தேதி வர்றோம்ன்னு சொல்லிட்டு வந்தாச்சு.

மாடி சாவியை கைப்புள்ளையின் அந்த நம்பிக்கையான ஃப்ரெண்டிடம் கொடுத்து வந்தாச்சு. அவர் விலைக்கு வேணுமான்னு அவர் ஃப்ரெண்ட் வட்டாரத்தில் பேசிட்டு இருக்கார். (சாவியை இல்லைங்க,,வீட்டை) கைப்புள்ள+குரூப் அடுத்தும் தெற்கே தலைவைக்க போகுது. திரும்பவும் மூணு கோயில்களுக்கும் விசிட் அடிக்கப்போகுது!!!. திரும்பவும் தகிரியத்துடன் Mr.@#$% -ஐ சந்திக்க போகுது!!!எதுக்கு அவ்ளோ நல்லவரா அவர் பேசினார். பதுங்கினாரா இல்லை பாயப்போறாரா என்ற ஆயிரம் கேள்விகளுடன்

கைப்புள்ள