Wednesday, September 04, 2013

தங்கமீன்கள்+தகர சுறாக்கள் இடையில் ஆசிரியர்கள்

அப்பா மகள் கதை என்பதை விட இன்றைய தனியார் பள்ளிகளின் நிலைமையை தன் தங்கமீன்கள் படத்தில் ராம் முக்கிய பிரச்சனையாக காண்பித்து இருக்கிறார்.படத்தில் கடைசியில் குறைந்த சம்பளத்திற்கு நன்கு உழைத்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி என்று போடும் கார்டோடு படம் முடிகிறது.தனியார் பள்ளியில் அதிக வேலைப்பளுவில் மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும்,பார்த்த அத்தனை ஆசிரியர்களும் ம் என்று ஒரு பெருமூச்சு விட்டு கொள்ளலாம்.


தனியார் பள்ளியில் பணிபுரிந்த போது ஏன் தான் இந்த பெற்றோர் இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த பள்ளிகளை நம்பி ஏமாந்து போறாங்களோ என்று தோன்றும். கம்பியூட்டரே காண்பிக்காமல் கம்பியூட்டர் ஃபீஸ் வாங்குவார்கள். ஒழுங்காய் கற்பிக்கும் ஆசிரியர்களை ஓவர்லோட் ஏற்றி அவர்களின் வேலையில் ஒரு சலிப்பினை ஏற்படுத்தி விடுவார்கள்.30 பேர் இருக்கும் இடத்தில் 45,50 என குழந்தைகளுக்கு கற்பிக்கும் நிலைமை அதுவும் சில நிமிடங்கள் ப்ரேக் இல்லாமல்.

சில பள்ளிகளில் சேரில் ஆசிரியர் க்ளாசில் உட்காரவே கூடாது, ஒரு ஆசிரியர் கூட இன்னொரு ஆசிரியர் பேச கூடாது.கட்டாயம் கொண்டை போட வேண்டும்.அதனால் தலை வலி வந்து நாள் முழுவதும் அந்த தலை வலியோடே இருக்க வேண்டியது இருக்கும். ஸ்கூலில் டூர் என்று அழைத்து போவார்கள் அதற்கு கட்டாயம் அவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் போக வேண்டும்.அதற்கு பணமும் தர வேண்டும். எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்களை வெளியில் பார்த்தால் பெண் ஆசிரியைகள் அவர்களுடன் பேச கூடாது.

படத்தில் செல்லம்மா விரும்பும் கனவுப்பள்ளியை எந்த கல்யாணியாவது தொடங்க மாட்டாரா என்று தான் அனைவரும் ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.

அய்யோ இப்போ நினைத்தாலும் ஸ்கூல் போக பயப்படும் வெறுக்கும் குழந்தைகள் போலவே எனக்கும் இந்த தனியார் பள்ளிகளுக்கு வேலைக்கு போக வெறுப்பு தான் வருகிறது.

கணவரின் சம்பளம் குறைவாக இருப்பதாலோ இன்னும் பிற பொருளாதார சூழல் காரணமாகவோ தான் நிறைய ஆசிரியர்கள் நொந்து வெந்து போய் இந்த தனியார் பள்ளிகளில் வேலை பார்த்து  கொண்டிருக்கிறார்கள். இவ்ளோ ஃபீஸ் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யும் அரசு இவ்ளோ சம்பளம் கட்டாயம் ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

வேளச்சேரி, அடையாறு போன்ற இடங்களில் ஒரு வீட்டிற்கு சமையல் வேலைக்கு வெறும் இரண்டு மணிநேரம் போகும் ஒரு சமையல்காரரை விட M.A.,Msc,M.Phil என படித்து விட்டு எட்டு மணிநேரத்திற்கும் அதிக நேரம் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் சம்பளம் குறைவு.


3 comments:

குட்டிபிசாசு said...

really true. But at the same time, many of the teachers in govt. schools are getting good salary without working.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆசிரியர்கள் உட்பட இன்றனைத்தும் சிரமம் தான்...

கலியபெருமாள் புதுச்சேரி said...

அரசு பள்ளி ஆசிரியர்களை மட்டும் குறைகூறி புண்ணியம் இல்லை.மனசாட்சியுடன் பணிபுரிபவர்கள் எல்லாத்துறையிலும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களோ. நிர்வாகம் சரியாக இருந்தால் நிலைமை மாறலாம்.