Monday, May 07, 2012

பெயரால் ஒரு காமெடி

திண்டுக்கல்லில் இருக்கும் எங்கள் குடும்ப நண்பர் இந்திரா அவருக்கு தெரிந்தவர்களின் பெயர்களை பெரும்பாலும் சுருக்கமாக தான் கூப்பிடுவார்.அமுதான்ன்னா அம்மு,கீதான்னா கீ, நிவேதிதான்னா நிவி,சுகன்யா எனில் சுகி இப்படி.சரியான சுறுசுறுப்பு.அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஜாம், ஜூஸ் செய்து தருவது தன் சகோதரர்களுக்கு வத்தல்,வடாம்,கஞ்சி மாவு அது இது என்று அவர் உடல் உழைப்பால் செய்ததை பார்சல் செய்து கொடுத்துட்டே இருப்பார்.நாம் போனால் கூட எதாவது வீட்டிலே செய்தது என்று பார்சல் கொடுக்காமல் இருக்க மாட்டார். 

ஒரு முறை அவரின் தம்பி மனைவியின் வயதான அம்மா இறந்து விட்டார்.அதன் பிறகு வந்த நாட்களில் அவ்வப்போது அவர்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு எதாவது சாப்பாடு பார்சல் இவர் வீட்டில் இருந்து தான். ஒரு நாள் அவசரமாய் மதுரை போக வேண்டி இருக்கவே பச்சை மொச்சை,முருங்கைக்காய்,கறி, கோலா உருண்டை போட்டு நல்ல காரசாரமாய் குழம்பு செய்து அதை ஒரு பெரிய தூக்கு சட்டியில் ஊற்றி வீட்டு வேலைக்காரரிடம் இதை இழவு வீட்டில கொடுத்துடு நான் மதுரை போகிறேன் என்று சொல்லி கிளம்பி போய் விட்டார்.

இழவு வீட்டில் சாதம் மட்டும் செய்து விட்டு 1 மணியாச்சு,2 மணியாச்சு,2.30 ஆச்சு பசி பொறுக்காமல் என்ன இந்திரா குழம்பு கொடுத்து விடுறேன்னு சொன்னியே எங்க குழம்பு என்று கேட்க இவர் உடனே வீட்டிற்கு ஃபோன் செய்து கேட்கவும் ஆமாக்கா நான் இளவக்கா வீட்டில் 12.30 மணிக்கே கொடுத்துட்டேனே என்று வேலைக்காரர் சொல்லி இருக்கிறார். என்னது இழவு அக்கா வீடா?? என்னடா சொல்ற? அக்கா நீங்க தானே இளவக்கா வீட்டில் கொடுக்க சொன்னீங்க என்று சொல்லவும் தன் தவறை உணர்ந்தார்.இவர் கொடுக்க சொன்னது இழவு வீடு.அவர் கொடுத்ததோ இளா வீடு என்ற இளவரசி வீடு.

இதில் காமெடி என்னவென்றால் அந்த இளவரசி வீட்டில் இருப்பது அவரும் அவர் அம்மா மட்டும் தான் என்னடா இது ஒரு சட்டி நிறைய குழம்பு எதற்கு என்று அவருக்கு கொஞ்சமும் டவுட் வரலை இந்திரா மதுரை போறதால் 2 நாட்களுக்கு சேர்த்து கொடுத்துட்டு போனதாய் நினைத்து நன்கு மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு மீதியினை ஃப்ரிட்ஜில் பத்திரபடுத்தி வைத்தார்களாம். ஆஹா சுருக்கமாய் பெயர்களை சொல்வதால் வந்த பிரச்சனையா? இழவு வீட்டிற்கு வேலைக்காரர் செய்த தவறை சொல்லவும் மதியம் 3 மணியானதால் ஹோட்டலில் சாப்பாடு தீர்ந்து போனதால் வெறும் தயிர்,ஊறுகாய் வைத்து சாப்பிட்டார்களாம்.







3 comments:

கோவை நேரம் said...

ஹி..ஹி..ஹி..பெயரை சுருக்கியதால் பாவம் பசியும் சுருங்கி விட்டது என நினைக்கிறேன்

பாலா said...

ஹா ஹா மிக இயல்பான காமெடி.

Anonymous said...

:-)