என்ன செய்தார்?: பர்மாவில் ஜனநாயகத்தினை கொண்டு வருவதற்கும் இப்பொழுது அங்கு நிலவி வரும் ராணுவ ஆட்சியினை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் 20 ஆண்டுளாக போராடி வருபவர் சூகி. பல உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பர்மா ராணுவ ஆட்சியாளர்கள் இவரை 14 வருடங்களாக வீட்டுக்காவலில் வைத்து உள்ளார்கள்.
யார் இவர்?: 1945-ல் ரங்கூனில் சூகி பிறந்தார்.இவரின் தந்தை ஆங்சான் 1947-ல் கொலை செய்யப்பட்டார்.தற்கால பர்மாவின் தந்தை எனப்படுவார் இவரின் தந்தை. இவருக்கு இரண்டு சகோதரர்கள்.ஒருவர் இளவயதில் இறந்து விட்டார்.இன்னொரு மூத்த சகோதரர் அரசியலில் ஆர்வம் இன்றி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
என்ன படித்தார்?: சூகியின் அம்மா பர்மாவின் வெளிநாட்டு தூதராக இந்தியாவில் வேலை செய்த போது சூகி நம் டில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் தன் இளங்கலை பட்டம் அரசியல் துறையில் பெற்றார். பின் ஆக்ஸ்ஃபோர்டில் முதுகலை பெற்று மூன்று வருடம் ஐக்கிய நாட்டு சபையில் வேலை செய்தார். அதன் பிறகு லண்டனில் டாக்டர் பட்டமும் பெற்றார்.
யாருடன் திருமணம்?: 1972-ல் கியூபா நாட்டை சேர்ந்த மைக்கேல் ஆரிஸ் என்பவரை மணம் செய்துக் கொண்டார். சூகிக்கு இரண்டு மகன்கள்.இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார்.
எப்படி வாழ்க்கையில் திருப்பம்?: 1988-ல் தன் தாயாரை பார்க்க பர்மா வந்த போது அப்போதைய பர்மாவில் அதன் ஆட்சியாளரை விலக்கி விட்டு ஆட்சியினை பிடித்தது ராணுவம்.அதை எதிர்த்து ஒரு புதியக் கட்சியினை ஆரம்பித்து சூகி செய்த பிரச்சாரம் அவருக்கு பெரும் ஆதரவாளர்களை தந்தது. உடனே அவரை கைது செய்தது பர்மா ராணுவ அரசு.1990-ல் நடந்த தேர்தலை பெரும் வெற்றி பெற்றது சூகியின் கட்சி.ஆனால், பிரதமர் ஆக விடாமல் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரின் குடும்பம் லண்டனில் இருந்தது. கணவர் கேன்சரில் கஷ்டப்பட்டபோது அவருக்கு பர்மா வருவதற்கு பர்மா அரசு விசா வழங்க மறுத்தது. கணவர் 1999-ல் இறக்கும் வரை தன் மனைவியை 5 முறை மட்டுமே சந்திக்க முடிந்தது. தற்காலிகமாக அவரை 5 முறையும் வீட்டுக்காவலில் இருந்து பர்மா அரசு விடுதலை செய்தது.
திரும்ப பர்மாவிற்கு திரும்ப கூடாது அப்படி செய்தால் முழுவிடுதலை அளிக்கப்படும் என்ற ராணுவத்தின் நிபந்தனையினை மறுத்து இன்றும் வீட்டுக்காவலில் உள்ளார் சூகி.


இப்போது சூகி?: 2008-ல் பர்மாவினை தாக்கிய நர்கீஸ் புயலால் அவரின் வீட்டுக் கூறை இடிந்து விழுந்தது. மின்சாரம் இல்லாத அந்த வீட்டில் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு வருடம் வாழ்க்கை நடத்தினார். 2009-ல் தான் அரசு அவர் வீட்டினை புணரமைத்தது. காந்தியின் கொள்கைகளில் பெரும் பிடிப்பு உள்ளவர் சூகி. இரண்டு வேலையாட்கள் மற்றும் மருத்துவர் ஒருவர் அவ்வப்போது அந்த வீட்டிற்கு சென்று வர அனுமதி உண்டு. அவரின் மகன்கள் கூட அவரை தொடர்பு கொள்ளகூடாது. அடிக்கடி நோய்வாய் பட்டாலும் வீட்டுக்காவலில் தான் இருக்கின்றார். 2003-ல் அவரின் கர்ப்பபை நோய் காரணமாக அகற்றப்பட்டது. அதன் பின்னரும் அவரை சிறையில் தான் அடைத்தது.
புத்தகங்கள் படித்து தன் பெரும்பான்மையான நேரத்தை கழித்து வருகிறார். உலக நாடுகள் ஏகப்பட்ட பரிசுகள் கொடுத்து அவரை கெளரவித்து உள்ளது. 1991-ல் நோபல் பரிசு பெற்றார். அவர் சார்பாக அவரின் மகன்கள் பரிசினை பெற்றனர். அந்த பணத்தினை மேல் படிப்பு படிக்கும் எளிய பர்மிய மாணவர்களுக்கு கொடுத்து விட்டார்.
காந்திய கொள்கைகளில் மிக பிடிப்பு உள்ள சூகி காந்திய வழியில் போராடி வருகிறார். ஐக்கிய நாட்டு சபையும் தன்னாலான முயற்சிகளை அவரை விடுவிக்க எடுத்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பர்மாவில் பொது தேர்தல் வர இருக்கிறது. எனவே, சூகி இப்போது விடுதலை ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். அடுத்த ஆண்டு இந்த தினம் அவர் விடுதலை பெற்ற ஒரு தலைவராக உலா வர கடவுளை பிராத்திப்போம்.
