Wednesday, October 21, 2009

ஆட்டோகிராஃப்-2

நான் +2 படிக்கும் போது ஏதோ காரணமாய் திண்டுக்கல் போன என் அப்பாவிற்கு அங்கு வைத்து ஹார்ட் அட்டாக் வந்து விட்டது. 3மாதம் பெட் ரெஸ்ட் எடுக்க டாக்டர் சொல்லிவிட்டார். என் தம்பிகள் சின்ன கிளாஸில் படித்ததால் உடனே அவர்களுக்கு ஸ்கூலில் இடம் கிடைத்து திண்டுக்கல்லில் சேர்ந்து விட்டார்கள். நான் +2என்பதால் ஸ்கூலில் 2மாதங்கள் இடம் கிடைக்காமல் ஸ்கூல் ஸ்கூலாக அழைந்து கொண்டு இருந்தேன். என் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்பதை விட என் படிப்பு போச்சே என்று தான் நான் ஒரே அழுகை.படிப்பில் ஒன்றும் புலி இல்லை.ஜாலிக்காக ஸ்கூல் போற கேஸ் நான். 2மாதங்கள் கழித்து எனக்கு திண்டுக்கல் அவுட்டரில் ஒரு ஸ்கூலில் +2இடம் கிடைத்தது. நான் +1ல் படித்தது,மேத்ஸ்,பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,காமர்ஸ்(என்ன் அருமையான காம்பினேஷன் - திருநெல்வேலியில்) +2முதல் 2மாதங்களும் இந்த குரூப் தான். இப்ப திண்டுக்கல்லில் காமர்ஸ்க்கு பதில் பயாலஜி.

ஸ்கூல் எனக்கு பிடிக்கவேயில்லை. முதலில் ஸ்கூலில் இடம் கிடைக்கவில்லை என்று அழுத நான் இப்ப ஸ்கூல் போக அழுதேன். வேண்டும் என்றே பஸ்ஸை மிஸ் செய்தேன் நிறைய நாட்கள்.எனவே, அடிக்கடி மாமா யாராவது பைக்கில் விட்டு வருவார்கள். எனவே, தப்பிக்க முடியாது. 3மாதங்களுக்கு பின் அம்மா,அப்பா திருநெல்வேலிக்கு போய் விட்டார்கள்.

நான் படிச்ச லட்சணம்:

பயாலஜி: படம் வரைய வேண்டும் என்றால் பென்சிலை எப்படி பிடிக்கவேண்டும் என்றே தெரியாத ஒரு அப்பாவி நான். என் தாத்தா ஹோட்டல் வைத்து இருந்தார் அதில் வேலை பார்த்த +2வரை படித்த ஒரு கிராமத்து பையன் எனக்கு ரிகார்ட்ஸ் எல்லாம் மிக அழகாக வரைந்துக் கொடுத்தான். எனக்கு படம் வரைய வேண்டும் என்றால் அந்த பையன் சாயங்காலங்களில் வீட்டிற்கு வந்து விடுவான். அவனுக்கு படம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு. வேலையிலிருந்து எஸ்கேப் எனவே நிறைய நேரம் எடுத்து அழகாய் வரைவான்.தவளையின் குறுக்கு வெட்டு தோற்றம் தெரிந்து என்ன ஆகப் போகுது, மூளை எப்படி இருந்தால் என்ன குரோம்சோம், மகரந்தம் அது இது என்று ஒன்றும் புரியாமல் தேமே என்று இருப்பேன் கிளாசில். ஆனால் செடிகள், பூக்கள் பற்றி படிக்க பிடித்தது.

கெமிஸ்ட்ரி: நான் புதியதாய் சேர்ந்த ஸ்கூலில் கெமிஸ்ட்ரி டீச்சர் நான் சேரும் முன்பே அனைத்து ரிகார்ட்ஸ், லேப் எல்லாம் முடித்து விட்டு லீவில் போய்விட்டார்கள். எனவே, ஒரு பி.எஸ்ஸி முடித்த டெம்பரரி டீச்சர் தான் கிளாஸ் எடுத்தார்கள். பியூரட்,பிப்பெட் எது என்று தெரியாமலே +2பைனல் லேப் எக்ஸாம் போன ஒரு ஆள் நானாக தான் இருப்பேன். எனக்கு கொடுக்க போகும் சால்ட்டை பற்றி முன்னமே சொல்லி விட்டார்கள். இன்னொரு பெண் எடுக்கும் ரீடிங்கை எனக்கு வாங்கி கொடுத்து விட்டார்கள். வெற்றிகரமாய் ரிக்கார்ட்ஸுக்கு 49மார்க்கும் போட்டாச்சு.ஒரு ஈக்வேஷனும் புரியல்லை. சும்மா சோப் தயாரிப்பது எப்படி, சலவை சோடா உபயோகங்கள் என்ன என்ற மாதிரி சின்னப்புள்ளை தனமான கேள்விகளுக்கு ஆனால் வாழ்க்கைக்கு உபயோகமான பதில்களை படித்து வைத்து ஒப்பேத்தினேன்.

பிசிக்ஸ்: பிசிக்ஸாவது படிக்கலாம் என்றால் ஒரு சின்ன வயது மாஸ்டர் இருந்தார். அவருக்கு ஏனோ பெண்களுக்கு கிளாஸ் எடுப்பது ரொம்ப எரிச்சலாய் இருந்தது.இதுகளுக்கு சொல்லி கொடுத்து என்ன கிழிக்க போறாங்க என்ற எண்ணத்திலேயே எப்பவும் வெடு வெடு என்று இருப்பார்.என்ன எழுதினாலும் ஒழுங்காய் மார்க் போடமாட்டார். ஒரு பெரிய ஸ்கேல் பிஸிக்ஸ் லேபில் இருக்குமே அதை வைத்துக் கொண்டு பெண் பிள்ளைகளை தான் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அடிப்பார். ஒரு நாள் என் தலையில் அந்த ஸ்கேல் வைத்து லேசாக அடித்து விட நான் அப்பாவிடம் சொல்லிவிட அப்பா போன் செய்து ஹெட்மிஸ்டரிடம் திட்டிவிட்டார். அப்பா அப்பொழுது டீச்சர் அஸோஷியனில் மாநில செகரட்டரி. அதிலிருந்து நீ படி இல்லை என்னவோ செய் என்று அந்த மாஸ்டர் என்னை ஒரு குடம் தண்ணீர் என் தலையில் கவிழ்த்து விட்டு விட்டார்.ஆனால், அதன் பிறகு அவர் யாரையும் அடிக்கவில்லை. எனவே, ஸ்டூண்டஸ் மத்தியில் ஒரு கெளரவம் எனக்கு கிடைத்தது. அதானே அவசியம்.

மேத்ஸ்: மேத்ஸ் டீச்சரோ செம ஓல்டு. அப்படியே நோட்ஸ் வைத்துக் கொண்டு போர்டில் எழுதிவிட்டு போய் விடுவார். ஒரு மண்ணும் புரியாது. மேத்ஸ் டீச்சர் பெண் நான். நானாவது டியூஷன் போறாதாவது.வரது வரட்டும் என்று புரிந்ததை வைத்து மேத்ஸ் கிளாசை ஓட்டிக் கொண்டு இருந்தேன்.

லாங்க்வேஜ்: இங்கிலீஷ் டீச்சர் மட்டும் தான் பிடிக்கும். ரொம்ப அழகா இருப்பாங்க.ரொம்பனா ரொம்பவே. அப்பதான் படித்து முடித்து விட்டு ஸ்கூலில் சேர்ந்து இருந்தாங்க. சினிமா பற்றி எல்லாம் பேசுவாங்க. என் கஷ்டத்தினை உணர்ந்தாங்க. தமிழ் டீச்சரோ ரொம்ப அலட்டல் பேர்வழி . ஒரு முறை அடுத்த நாள் தமிழ் பரீட்சை இருக்க நான் முதல் நாள் ஈவினிங் ஷோ மண்வாசனை படம் பார்க்க தியேட்டர் போனால் எனக்கு பின்னாடி சீட்டில் தமிழ் டீச்சர் அவர்கள் கணவருடன். அதில் இருந்து என்னை அவர்க்ளுக்கு பிடிக்காமல் போயிடுச்சு. ரேவதியை எனக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு.

இப்படி ஒரு ஸ்கூல் எனக்கு தேவைதான். அப்பா சொன்னார். அடுத்த வருடம் சேர்ந்துக் கொள். இந்த வருடம் வீட்டிலேயே இரும்மா என்று அடங்கினால் தானே. நான் அந்த வருடமே +2முடிக்கவேண்டும் இல்லைனா என்னோட செட்டில் எல்லோரும் காலேஜ் போக நான் மட்டும் +2வா என்று ஒரே ரகளை செய்து இப்படி ஒரு அருதபழசு ஸ்கூலில் அப்பவே லஞ்சம் கொடுத்து சேர்ந்தேன்.

இதற்கு முன் எப்பவும் தாத்தா வீடு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் லீவில் தான் வருவேன். படிக்க ஒன்றும் இருக்காது. எப்பவும் ஒரே ஆட்டம். வீட்டில் எப்பவும் ஒரே கூட்டம் இருக்கும். மதிய வேளைகளில் ௨0-25பேருக்கு சமையல் செய்வார்கள் பாட்டி. கூட்டு குடும்பம். சொந்தக்காரர்கள் அடிக்கடி வந்து போவார்கள். இந்த சூழ்நிலையில் ஸ்கூலுக்கு போவேன் வருவேன் ஒன்றும் பிடிக்காமலே. ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு மிகவும் பிடித்தது. என் தாத்தா வீட்டிற்கு முன்னால் ஒரு பல்டாக்டர் கிளினிக் இருந்தது. அந்த டாக்டரின் தம்பி ரவி காலெஜில் படிச்சுட்டு இருந்தான்.தினம் மாலை வேலைகளில், சனி,ஞாயிறுகளில் அங்கு ஒரு சேரில் அமர்ந்து பேப்பர் வாசித்துக் கொண்டும் ஒரு சின்ன டீவியில் ஏதேனும் பார்த்துக் கொண்டும் என் வீட்டினை நோட்டம் விட்டுக் கொண்டும் இருப்பான். அவனை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டது இல்லை. ஆனால்,தினம் பார்ப்போம். எனக்கு ஓரு நாள் பார்க்காவிட்டால் கூட கவலையாக இருக்கும். சில சமயங்களில் என் ஸ்கூல் விடும் நேரங்களில் என் ஸ்கூல் வாசலில் நான் பஸ்ஸிற்கு நிற்க்கும் போது அவனும் அங்கு சைக்கிளில் நிற்பான். அப்புறம் நான் பஸ்ஸில் வந்து வீட்டிற்கு பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து வரும் போது பின்னாடியே சைக்கிளை உருட்டிக் கொண்டு வருவான். ஒரு வார்த்தை பேசியது இல்லை. என் கடைசி மாமாவுடன் நிறைய நாட்கள் திண்ணையில் இரவு நேரங்களில் அரைட்டை அடித்துக் கொண்டு இருப்பான். என் தாத்தா வீடு நிறைய கூட்டம் இருக்கும் . ஆனால் ஒருவருக்கும் நான் என்ன செய்கிறேன் என்று கவனிக்க நேரம் இல்லை. அதனால் என்னை தினமும் பார்த்துக் கொண்டே இருந்த ரவியை பார்த்தால் எனக்கு ரொம்ப பிடித்தது.

வெற்றிகரமாய் +2எக்ஸாம் எழுதி 60சதவீதம் மார்க் வாங்கி(இந்த மார்க்கே அதிகம்) திருநெல்வேலிக்கு போனேன். சந்தோஷமாய் காலேஜில் சேர்ந்தேன். அப்புறம் அப்படியே ரவியை மறந்தும் போச்சு. எப்பவாச்சும் திண்டுக்கல் போகும் போது பார்ப்பேன். ஆனால், +2படிக்கும் போது பார்க்க பிடித்த மாதிரி பிடிக்கவில்லை.

4 comments:

butterfly Surya said...

+2 வில் பிடித்த விஷயங்கள் பல கல்லூரியிலேயே பிடிக்காது. இப்போ எப்படி பிடிக்கும்..

கொசுவத்தி பதிவா..?? கலக்குங்க அமுதா..

"உழவன்" "Uzhavan" said...

ஆட்டோகிராப் - 3 இருக்கா?

அமுதா கிருஷ்ணா said...

கொசுவர்த்தி பதிவே தான் சூர்யா..
ஆட்டோகிராப்-3,4,5 இருக்கு உழவன்..

லதானந்த் said...

மலரும் நின்வுகளா மலர்ந்த நினைவுகளா? எப்படியோ. படிக்க நல்லா இருக்குது