1. திருநெல்வேலி:
பிறந்த ஊர் யாருக்காவது பிடிக்காமல் போகுமா? காலையில் குறுக்குத்துறை தாமிரபரணியும், பதநீரும், மாலையில் சூடான அல்வாவும்,மிளகு போட்ட காராசேவும், பார்வதி,ரத்னா,ராயல், லெட்சுமி தியேட்டர்களும், பார்த்த ரஜினி, கமல் படங்களும்,படித்த சாராடக்கர் காலேஜும், டவுணில் உள்ள வலவு வீடுகளும், நெல்லையப்பர் கோயிலும்,ஆனி திருவிழா+தேரும்,மஞ்சள் வயக்காட்டு வாழைப்பழங்களும், சீசன் தவறாத குற்றாலமும், சந்திப்பிள்ளையாரும்,RMKV கடையும் ஆடி கழிவும்,தினம் காலை, மாலையில் குழாயில் வரும் நல்ல தண்ணீரும் ஒரு மணி நேர பயணத்தில் இருக்கும் திருச்செந்தூர்,கன்னியாகுமரியும்,பாபநாசமும், போல வாலே என்ற பேச்சும்..இன்னும் இன்னும்...மறக்க முடியுமா?
2. திண்டுக்கல்:
மலைக்கோட்டை,தாடிகொம்பு கோயில்,மலைவாழைப் பழம்,தலப்பாக்கட்டி,பங்காரு பிரியாணி,சம்மரில் தண்ணீர் கஷ்டமும், நடுராத்திரியில் எல்லோரும் தண்ணீர் பிடிப்பது இங்கு சர்வ சாதாரணம். மல்லி,ரோஜா,இருப்புசட்டி,பூட்டு,வெத்திலை,ஷேஷய்யர் வெள்ளை ஜிலேபி,நன்னாரி ஜுஸ் மிக பிரசித்தி.
3. சோழவந்தான்:
சின்ன வயதில் முதலில் அதிக நாட்கள் தங்கிய அழகிய கிராமம். சித்திரை திருவிழா, வைகை நதி, குட்டி கேரளம் போல் தென்னந்தோப்புகள், சொந்தகாரர் ஒருத்தங்க தோப்பில் ஓடி விளையாடியதும், கிணற்று பக்கத்தில் உள்ள மோட்டரில் குளித்ததும்,போதும் போதும் என்று இளநீர் குடித்ததும், டூரிங்க் தியேட்டரில் பார்த்த படங்களும்..மறக்க முடியாது.
4. விஜயவாடா:
கிருஷ்ணா நதி நிறைய தண்ணீரோடு ஓடிவருவதை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். தினம் அதிக ரயில்கள் கடக்கும் ரயில்வே ஸ்டேஷன்.மலை மேல் இருக்கும் கனக துர்க்கா கோயில்,12கிமீ தூரத்தில் இருக்கும் மங்களகிரி கோயிலில் பானக நரசிம்மர் வாயில் பானகம் ஊற்றுவார்கள், நிஜத்தில் குடிப்பது போல இருக்கும்.எந்த பாத்திரத்தில் இருக்குமோ அதில் பாதி பானகம் மட்டுமே குடிப்பதாக ஐதீகம்.
5. திருப்பதி:
யாருக்குதான் திருப்பதி பிடிக்காது.எவ்வளவு கூட்டம் இருப்பினும் அடுத்த சான்ஸ் கிடைத்தால் போகாமல் இருக்க மாட்டோம். இங்கு srivari சேவா என்ற அமைப்பு உள்ளது. நாம் அங்கு சென்று குறைந்தது 7 நாட்கள் சேவை செய்யலாம். சேவை என்றால் அன்னதான கூடத்தில் உணவு பரிமாறலாம்.சின்ன பிரசாத லட்டு பிடிக்கலாம்.கியூ ரெகுலேட் செய்யலாம்..ஒரு நாளைக்கு 5 மணி நேரம் செய்யவேண்டும்.அதற்கு வருடம் தவறாமல் சென்றுவிடுவோம்.மலைக்கு நடந்து ஏறுவதாய் இருந்தால் திருப்பதியில் மாலை 5 மணிக்கு ஸ்டார்ட் செய்தால் இரவு 10குள்ளாக மலைக்கு போய் விடலாம். காலையில் அங்கபிரதட்சணம் செய்தால் 4 மணிக்கெல்லாம் சாமியை நன்கு பார்க்கலாம். நிம்மதியாய் எந்த கவலையும் இல்லாமல் இருந்து வரலாம். அதனால் திருப்பதி ரொம்ப பிடிக்கும்.
6.ஆக்ரா:
யாருக்குதான் ஆக்ரா பார்க்க ஆசை இருக்காது.இரண்டு முறை போய் வந்தாச்சு. மனைவி மேல் எவ்ளோ பாசம் இந்த ஷாஜகானுக்கு. ஆனால்,,ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்களை எப்படி தான் கொண்டு வந்தார்களோ...மாலையில் பார்ப்பதே அழகு. ஆக்ரா பேடா நன்றாக இருக்கும்.
7.கோத்தகிரி:
ஊட்டி இப்பொழுதெல்லாம் ஒரே கூட்டம்+வெயில்.பக்கத்தில் இருக்கும் கோத்தகிரி இன்னும் மாசு படாமல் அழகாய் உள்ளது. கொடநாடு வியூ பாய்ண்ட் அழகோ அழகு, அம்மாவின்(ஜெயலலிதா) வேலி போடபட்டபெரிய்ய்ய்ய தேயிலைத்தோட்டம்,சின்ன சின்ன பார்க்குகள். 6 மணிக்கே தூங்கிவிடும் ஊர்.
8.கல்கத்தா:
இங்கே உள்ளவர்கள் டயாபடிஸ் பற்றி ஒரு கவலையும் இல்லாதவர்கள் என்று நினைக்கிறேன் .அவ்ளோ ரசகுல்லாவும்,கடுகு எண்ணையில் பொரிக்கப்பட்ட சமோசாவும் கடைகளில் அதிகம் விற்கிறது.நதி கொள்ளாமால் தண்ணீர் ஓடுகிறது. ஹீக்ளி நதி மேலே பழையது, புதியது என்று இரண்டு பிரிட்ஜ்கள்,பேரம் பேசாமல் டாக்ஸியில் ஏறலாம். இன்னும் ஓடும் ட்ராம் வண்டிகள்ஆற்றில் ஓடும் ferry புதிய அனுபவம். மக்கள் கூட்டம் கூட்டமாய் எங்கு போகிறார்களோ தெரியவில்லை அப்படி ஒரு கூட்டம்.நவராத்திரி நேரத்தில் போனோம்.காளி கோயில்,ராமகிருஷ்ணர் மடம்,மாயாப்பூர் ஹரே ராம் இஸ்கான் கோயில் மறக்க முடியாது.பெண்கள் கையில் போட்டு இருக்கும் வளையல் தான் தாலிக்கு ஒப்பானது. இங்கு அனைவரும் மீன் சாப்பிடுகிறார்கள்.அன்னை தெரசா எதனால் இந்த ஊரை சேவைக்கு தேர்ந்து எடுத்தார்கள் என்று ரயில் ஊருக்கு நுழையும் போதே தெரிந்துவிடுகிறது.அவ்வளவு பிச்சைக்காரர்கள்.பக்கத்துப் பங்களாதேசத்தில் இருந்து வரும் அகதிகள்.
9.ஷில்லாங்:
ரயில் பயணத்திலேயே அதிக நேரம் பயணம் செய்தது இந்த ஊருக்கு தான் சனி காலை சென்னையில் ரயில் ஏறினால் திங்கள் காலையில் அஸ்ஸாம் தலைநகர் அங்கிருந்து 4 மணிநேரம் மலை ஏறினால் மேகாலயா தலைநகர் ஷில்லாங் அடையலாம். மிக அருமையான ஊர்.பக்கத்தில் அதிக மழை பெய்யும் சிரபுஞ்சி. சென்னையில் இருந்து 2929 கிமீ தூரம்.
10.காசி:
காசி போனதால் தான் பெரியார் நாத்திகர் ஆனதாய் சொல்வார்கள். ஆனால், இங்கு சாமியார்கள் நிறைய. இங்கு மாடு முட்டாது, பிணம் நாறாது,பருந்து வட்டமிடாது,பூ மணக்காது, ஒரு படித்துறையில் குளித்து கொண்டு இருக்கும் போது பக்கத்து அரிசந்திரன் வேலைபார்த்ததாய் கூறபடும் படித்துறையில் பிணம் எறிந்து கொண்டும், இன்னும் நிறையப் பிணங்கள் எரிவதற்கு வெயிட்டிங் லிஸ்டில் இருந்தன. 63 படித்துறைகள் உள்ளன.இங்கு உள்ள நிறைய பசங்க நன்கு தமிழ் பேசுகிறார்கள்.மாலையில் நடக்கும் ஆரத்தி பார்க்க மிக அருமை. நதிக்கு ஆரத்தி 1 மணி நேரம் நடக்கிறது. காசி விஸ்வநாதருக்கு நாமே ஆற்றில் குளித்து விட்டு தண்ணீர் கொண்டு சென்று அபிஷேகம் லிங்கத்தைத் தொட்டு செய்யலாம்.தமிழர்கள் அதிகம் வரும் ஒரு ஊர்.
11.சென்னை:
வாழும் ஊர். பிடித்து தான் ஆக வேண்டும். எல்லா பிரிவு மக்களையும் தாங்கும் சென்னை அழகோ அழகு. இயற்கையும் (ECR-ம்,குன்றத்தூர்,திருநீர்மலை) இன்னும் நிறைய உள்ள ஊர். மாடர்னாகவும் தன்னை காட்டிக் கொள்ளும் ஊர்.யார் வந்தாலும் ஏற்று கொள்ளும் ஊர்.தி.நகரில் எதுதான் கிடைக்காது.குறைந்த விலையில் இந்தியாவில் அனைத்து நகரங்களின் பிரசித்தி பெற்ற சாமான்களை இங்கே வாங்கலாம்.