Monday, January 31, 2011

மை சிஸ்டர்ஸ் கீப்பர்

தன் பெண் குழந்தை kate-ற்கு ரத்த புற்றுநோய் இருப்பதால் அவளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காகவே, இன்னொரு குழந்தை Anna-வை பெற்றுக்கொள்கிறார்கள் பெற்றோர். 10 வயது வரை Anna தன் சகோதரி kate மருத்துவத்திற்கு உதவுகிறாள்.

kate-ற்கு கிட்னி ஃபெயிலர் ஆகிறது. ஆனால் Anna தன் கிட்னியினை சகோதரி kate-ற்கு கொடுக்க மறுத்து,கட்டாயப்படுத்தும் தன் தாய் மீது கேஸ் ஃபைல் செய்கிறார். ஆமாம் kate-ற்காக ஏன் Anna இப்படி கஷ்டப்பட வேண்டும் என்று தான் நமக்கும் தோன்றுகிறது.கேஸ் நடக்கும் போது அவர்களின் சகோதரன் உண்மையினை கூறி விடுகிறான். அதாவது Kate தான் கிட்னி வேண்டாம் என்றும், அந்த ஆபரேஷனால் தான் உயிர் பிழைக்க மாட்டேன் என்றும் தன் தங்கையினை கிட்னி கொடுக்க மறுக்கும் படி கூறி தன் பெற்றோர் மீது கேஸ் போடும்படி சொல்லி இருக்கிறாள்.

Cameron Diaz
ஒரு அழகான அமெரிக்க குடும்பம். தாயாக வரும் Cameron Diaz சூப்பர் நடிப்பு. அந்த பெண்கள் இருவரும் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்கள். நிறைய இடங்களில் நம் கண்களில் கண்ணீர். கேன்சர் என்னும் இந்த கொடிய அரக்கனை வெல்வது எப்போது?.கீமோவின் பின்விளைவுகள் பயமுறுத்துகின்றன.கேட்டின் பாய்ஃப்ரெண்டும் கேன்சர் நோயாளி.குழந்தைகளின் அப்பாவாக வருபவரும் அருமையாக வருகிறார்.

                                        
Anna
Kate

ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.



Friday, January 28, 2011

கரண்டி முட்டை

முட்டையினை கரண்டியில் சமைப்பதால் இது கரண்டி முட்டை.
கரண்டி இப்படி நல்லா குழியாய் (கட்டாயம் கருப்பாய்!!!) இருக்க வேண்டும்.உடைத்த முட்டை, பொடித்த உப்பு,தட்டிய சோம்பு,பொடித்த மிளகு போட்டு கலந்து,இப்படி ஊற்றி கொஞ்சமாய் எண்ணெய் ஊற்றி ஸ்பூனால் ஒரு திருப்பு திருப்பினால்


இப்படி கரண்டி முட்டை ரெடி.
                  



இதனுள் முட்டை வேகும் போது கொஞ்சமா வேக வைத்த கறித்துண்டுகள், கோழித்துண்டுகள் பிச்சுப் போட்டால் ஒரு கரண்டி முட்டை ஹோட்டல்களில் 60 ரூபாயாம். பிரியாணி போல இல்லாமல் ஆத்துக்காரர் உதவியின்றி நானே சாப்பிட்டது.சாரி செய்தது.

Thursday, January 27, 2011

வெரைட்டி-தை-2011

பொங்கல் அன்று எதிர் வீட்டில் 3 மாதம் முன்பு புதியதாய் குடி வந்து இருக்கும் ஒரு குடும்பத்திற்கு பொங்கல் கொடுத்து வாடா என்று நகுலிடம் கேட்ட போது, போங்கம்மா அந்த வீட்டில் யாரும் முகம் கூட பார்க்க மாட்டாங்க, பேசவே மாட்டாங்க நான் போக மாட்டேன் என்றான், நீங்களும் பேசி நான் பார்த்தது இல்லை என்ன திடீரென்று பொங்கல்,பாயாசம் என்று பார்சல் என்றான். அதற்கு ரிஷி நகுலிடம் சொன்ன பதில் கடைசி பத்தியில்.


போன வாரம் தம்பி மகன் விஷால் ஸ்கூல் டே ஃப்ங்ஷன். சார் டான்ஸ் ஆடுகிறேன் என்று 10 நாளா தினம் ஃபோனில் சொல்லிட்டே இருந்தான்.சரி என்று ஸ்கூலுக்கு போனேன். உன் கூட ஆடப்போகும் பெண் பெயர் என்னடா கேட்டால் ஒரே வெட்கம் சாருக்கு. அப்புறம் ரொம்ப அலட்டிக் கொண்டு ஒரு குட்டிப் பெண்ணை காண்பித்தான். பெயர் எல்லாம் தெரியாது என்று சொல்லிட்டான்.சரியென்று அந்த பெண்ணிடம் பெயர் கேட்டேன். அது அதிபயங்கர வெட்கத்தில் ப்ரியா என்று சொல்லிச்சு. உடனே இவன் மம்மி நீங்க யார் கிட்டேயும் இதை சொல்ல கூடாது என்று சொல்லிட்டான்.இது ஏன்னுதெரியலை. வெட்கமாம்.மூன்றாவதாக அவனின் ப்ரோக்ராம் வந்தது. நல்லாதான் ஆடினார்கள். ஆனால் குழந்தைகள் போட்டிருந்த ட்ரெஸ் கலர் தான் சகிக்கலை. மண் கலர், மரக்கலர்,இட்லி பொடிக்கலர்,மூக்குப்பொடி கலர் என்ன ரசனையோ அந்த டீச்சருக்கு. வேறு டான்ஸ் ஆடினவர்கள் எல்லாம்   
கலர்ஃபுல்லாய் இருக்க இவர்கள் ட்ரெஸ் கொடுமையாய் இருந்தது. ஆனால், குழந்தைகள் முகத்தில் இருந்த வெட்கம் கலந்த சிரிப்பு பார்க்க பார்க்க சூப்பர்.



போன வீக் எண்டில் ஒரு சூறாவளி சுற்றுப்பயணம். திண்டுக்கல், சோழவந்தான், சுல்தான்பேட்டை, கோயமுத்தூர் என பஸ்ஸிலேயே சுற்றி விட்டு வந்தோம்.சோழவந்தான் ஒரு குட்டி கேரளா.திண்டுக்கல் டூ வாடிப்பட்டி தனியார் பஸ்ஸில் இளையராஜா ராஜ்ஜியம் தான்.பாட்டு கேட்டுக் கொண்டே பசுமையில் பயணம் அருமையாக இருந்தது.

அப்புறமா சுல்தான்பேட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மாமா பெண் வீட்டிற்கு ஒரு விசிட்.மேடம் அலுவலகமும், வீடும் ஒரே காம்ப்பவுண்டினில்.காலை டீ,மதிய சாப்பாடு, மாலை டிபன் என வீட்டிற்கு அடிக்கடி விசிட் செய்கிறார். ஆனால், லீவு போட்டால் கூட வேலை செய்ய வேண்டி இருக்கும் சில சமயங்களில் என சலித்துக் கொண்டார்.

கோயம்புத்தூரில் என் கணவரின் ஃப்ரெண்ட் கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டு இருக்கிறார். அவரை பார்க்க சென்றோம். நானெல்லாம் தண்ணீ அடிச்சேன், ஸ்மோக் செய்தேன்.இப்ப அனுபவிக்கிறேன் , ஆனால் எந்த தப்பும் செய்யாத குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். கீமோவிற்கு செல்லும் போது அங்கு ட்ரீட்மெண்ட் செய்ய வரும் 5 வயது குழந்தைகளை நினைத்து தான் அவர் புலம்பினார். இந்த கேள்விக்கு பதில் தெரியலை.

போன மாதம் ஒரு நாள் மதியம் வீட்டில் நான் இல்லாத போத பூட்டி இருந்த வீட்டு வாசலில் எனக்கு ஃபோன் செய்துட்டு ரிஷி காத்து இருந்த போது அந்த எதிர் வீட்டு பெண் உன் அக்கா காலையில் 11 மணிக்கு போனாங்க, நீ வேணா என் வீட்டில் வெயிட் செய் என்று சொல்லி இருக்கிறார்.  ஆண்ட்டி அவுங்க என் அக்கா இல்லை, என் அம்மா, ஃபோன் செய்துட்டேன் இப்ப வந்துடுவாங்க என்று சொல்லி இருக்கிறான்.அன்று நான் வந்ததும் உங்களை அக்கா என்று நினைச்சுட்டாங்கம்மா என்று சிரித்தான்.அன்றுஅக்கான்னு அவுங்க சொன்னதுக்கு தான் நான் பொங்கல் கொடுக்கிறேனாம்.இல்லையே! ஒரு நட்பு உணர்வுடன் கொடுத்தால் இந்த காலத்து பசங்க இருக்காங்களே !!!


Wednesday, January 19, 2011

ஒரு உப்பு டப்பாவின் பயணம்

போன வாரம் என் ஃப்ரெண்ட் ஜெயா வீட்டிற்கு போன போது வழக்கம் போல் இரண்டு பேரும் பேசிக் கொண்டே சேர்ந்து சமைத்தோம்.அதாவது நான் பேசிக்கொண்டும், ஜெயா சமைத்துக் கொண்டும். சமைத்ததை சாப்பிட்டோமா என்றெல்லாம் கேட்க கூடாது. அவளுடைய இரண்டு பெண்களும், என்னுடைய இரண்டு பசங்களும் எதற்கு இருக்கிறார்கள்.எங்கள் சமையல் ஆராய்ச்சியின் எலிகளே அவர்கள் தானே.

ஆஹா!!! சமையலுக்கு தூள் உப்பு எடுத்த போது அந்த உப்பு டப்பாவை பார்த்து நான் அசந்தே விட்டேன்.மூடியில் லேசாக உடைந்த பகுதிக்கு செலோ டேப்பால் ஒரு ஒட்டு போடப்பட்டிருந்தது.நான் அசந்தது அந்த ஒட்டை பார்த்து அல்ல.அசந்த நான் இப்பொழுது சிரிக்க ஆரம்பித்தேன்.ஜெயா என்ன இது என கேட்டுக் கொண்டே நான் சிரிக்க கூடவே சேர்ந்து ஜெயா சிரிக்க எங்கள் அட்டகாச சிரிப்பை கேட்டு பசங்க எல்லாம் கிச்சனில் ஆஜர்.

என்ன மம்மி சொல்லிட்டு சிரிங்க என்று ஒரே நொச்சு.சிரிப்பால் எனக்கு விஷயத்தினை சொல்லவே முடியவில்லை.ஜெயாவிற்கும் சொல்ல முடியவில்லை. அந்த டப்பாவை என் கைக்கு அருகில் பார்த்ததும் என் ஃப்ரெண்ட் மகள் வைஷ்ணவிக்கு புரிந்து போச்சு. ஓ, இதுவா ஆண்ட்டி என்று சொல்லி விட்டு மற்றவர்களுக்கு எங்கள் சிரிப்பின் காரணத்தினை சொல்லி கொண்டு இருந்தாள்.



அதாவது இந்த உப்பு டப்பாவிற்கு ஒரு வரலாறு இருக்கிறது.
டப்பா தன் பயணத்தினை நெல்லையில் ஆரம்பித்து ஹைதை,மீரட்,
ரூர்க்கி,பெங்களூர்,வெலிங்க்டன், ஷில்லாங், நாசிக் என 20 வருடங்களாக ஒவ்வொரு ஊரிலும் ஒரு மூன்று வருடம் இருந்துட்டு இப்ப சென்னை வந்துள்ளதே அது தான் என் சிரிப்பிற்கு காரணம்.

அப்படி என்ன சிற(ரி)ப்பு அந்த டப்பாவில்.அது நாங்கள் ஆறாப்பு படித்த போது க்ளாசில் மிகவும் அமைதியாக இருக்கிறாள் என்று(என் கூட சேர்ந்து இருந்தும்) எங்கள் க்ளாஸ் டீச்சர் ஜெயாவிற்கு பரிசாக கொடுத்தது.அவள் வாழ்க்கையில் வாங்கிய ஒரே பரிசு அதான் என்பதால் அந்த டப்பாவிற்கு அவ்வளவு மகிமை.உப்பு தினம் சமையலுக்கு எடுத்தே ஆக வேண்டும் எனவே அந்த டப்பாவை தினம் பார்க்கலாம் என்பதால் அந்த டப்பா 20 வருடங்களாக உப்பை சுமக்கிறது.ஜெயாவின் கணவர் ஆர்மியில் ஆஃபிசர்.அதான் இத்தனை ஊர் சுற்றல்.

நகுல் ம்மா இப்படி சிரிக்கிறீர்களே, ஆண்ட்டியாவது ஒரு பரிசாவது வாங்கி இருக்காங்க நீங்க என்னம்மா வாங்கினீங்க என்ற போது எங்கள் ஃப்ரெண்ட்ஷிப் தான் நான் வாழ்க்கையில் பெற்ற பரிசு என்று சொல்லணும் போல் இருந்தாலும், அந்த கேள்வியே காதில் விழாது போல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருந்தேன்.

Tuesday, January 18, 2011

என்ன புரட்சி செய்யலாம்?

ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி போய் புத்தகங்கள் வாங்குவது என்பது சென்னை மக்களுக்கு எழுதபடாத சட்டமாகி விட்டது. நாங்கள் வாழ்வது தாம்பரம் என்றாலும் நாங்களும் ரவுடி தான்.கீழே உள்ள புத்தகங்கள் என் கணவர் வாங்கி வந்தது. 

                      இந்த புத்தகங்கள் பெரிய மகன் நகுல் வாங்கியது



போனவருடம் ராஜீவ்காந்தி கொலைவழக்கு புத்தகம் தான் தமிழில் முதல் முதலாக நகுல் படித்த புத்தகம். ஸ்கூலில் இங்கிலீஷ்,ஹிந்தி, சமஸ்கிருதம் படித்தான்.தமிழ் என்னிடம் கற்று கொண்டான்.
அவராகவே புத்தக கண்காட்சிக்கு போய் கிழக்கு பதிப்பகத்தை வீட்டிற்கே கொண்டு வந்து விட்டான்.


கீழே உள்ள புத்தகங்கள் சின்னவன் ரிஷி வாங்கியது.சாருக்கு தமிழ் தகராறு.எல்லா வருடமும் போல இந்த வருடமும், தமிழ் கத்துக்கணும் என்று சபதம் போட்டு இருக்கிறான்.இந்த வருடமாவது நிறைவேறுமா?

நானும் தங்கையும் உயிர்மை பதிப்பகம் போனோம்.ஜீரோ டிகிரி பார்த்தேன்.வாங்கும் தைரியம் வரவில்லை.ஓசியில் கிடைத்தால் படித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.என் தங்கை உலோகம்,நள்ளிரவில் சுதந்திரம்,சுஜாதா சிறுகதைகள் தொகுப்பு, இரண்டாம் இடம் போன்ற புத்தகங்களை வாங்கினார்.அடுத்த மாதம் அந்த புத்தகங்களை ஓசியில் படிக்க வேண்டும்.கமல் பற்றி புத்தகம் கிழக்கில் இருந்தது. நான் அதை சும்மா புரட்டிய போது நகுல், அம்மா அது புரியாது என்றான். டேய் அவர் பேசினால் தான் புரியாது. அதுவுமில்லாமல் இதை எழுதியது கமல் இல்லை என்ற போது பக்கத்தில் இருந்த கிழக்கு பணியாளர் சிரித்து விட்டார். 

இவை அல்லாமல் என் கணவர் SQL server reporting service,SQL AND Relational theory, அப்படி இப்படி என்று எனக்கு புரியாத SQL பற்றிய 5 புத்தகங்களை வாங்கினார்.ஏன்ப்பா இத்தனை புத்தகங்கள் என்று நான் அலுத்துக் கொண்ட போது பத்தாயிரம் ரூபாய் சம்பளம் போதும்னா சொல்லு புது கம்ப்யூட்டர் புத்தகங்கள் வாங்குவதை இப்பவே நிறுத்திக் கொள்கிறேன் என்றார். அய்யா சாமி அந்த சம்பளம் வெங்காயம் வாங்க கூட பத்தாதே, சார் எத்தனை SQL வேண்டுமானாலும் வாங்குங்க அட்டை போட்டு பத்திரமாய் செல்ஃபில் அடுக்கி வைக்கிறேன் என்று சொல்லிட்டு ஓடி விட்டேன்.

இடிஅமீன்,காஷ்மீர்,சுபாஷ்சந்திரபோஸ், ஃபிடல் காஸ்ட்ரோ இந்த வாரம் படித்து முடித்தேன்.அதன் பலனாக நானும் எதாவது புரட்சி செய்யலாமா என்ற யோசனையில் இருக்கிறேன். என்ன வாழ்க்கை இது? 
கிழக்கு பதிப்பகம் குறைந்த விலையில் அருமையான ஜூஸ் கொடுத்து இருக்கிறது.




Tuesday, January 11, 2011

சுத்தமான மெரினா..

சென்ற ஞாயிற்று கிழமை, ஜனவரி 9, காலை 5 மணிக்கெல்லாம் அதிசயமாய் நானும் என் மகன்களும் எழுந்துட்டோம். 6 மணிக்கு கரெக்டா ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இருக்கும் பீச்சிற்கு போய்விட்டோம். நாங்கள் போன போதே பத்து பேர் கையில் க்ளவுஸ் மாட்டிக் கொண்டு பெரிய பச்சை கலர் கவரில் பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து போட்டுக் கொண்டிருந்தனர்.நாங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமானோம். நல்ல குவாலிட்டியான மஞ்சள் நிற கிளவுஸ் கொடுத்தனர்.ஆளுக்கு ஒரு கவர் எடுத்துக் கொண்டு கடற்கரை ஒட்டி தண்ணீரில் அடித்து வரப்பட்ட ப்ளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்க ஆரம்பித்தோம்.



 தொடர்ந்து குனிந்து கொண்டே எடுப்பதால் இடுப்பு, கால் வலித்தது. முதல் அரை மணிநேரம் அமுதா இது உனக்கு தேவையா என்ற எண்ணம் வந்தது. அடுத்தவர்கள் கவரினை பார்த்ததும் நாமும் அதை போல நிரப்பணும்.
செய்வதை திருந்த செய் என்று சொல்லிக் கொண்டே மும்முரமாய் பொறுக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு வலி தெரியவில்லை.

என் சின்ன மகன் ரிஷி சொகுசு பேர்வழி. அவ்வப்போது என் பக்கத்தில் வந்து நைஸாக என் கவரை தான் எடுத்துக்க முயன்றான். நான் விடவில்லை என்ன சார் ஓபி அடிக்கலாம் என்று வந்தீயா, ஓடிப்போ சீக்கிரம் உன் கவரை நிரப்பு என்றதும் சிரித்துக் கொண்டே வேறு பக்கம் போனான்.

பெரியவன் நகுல் என்னை திரும்பிக் கூட பார்க்கவில்லை, மகனே உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று அவன் பக்கத்தில் போய் விசாரிக்க வேண்டி இருந்தது.

சின்ன ப்ளாஸ்டிக் கப்புகள், மிக சிறிய கவர்கள் என்று நிறைய இருந்தது. எடுத்து மண் உதறி எங்களின் பெரிய கவரில் போட்டு நிறைத்தோம் அப்புறம் இருவர் இருவராக அதை இழுத்து ஒரு இடத்தில் வைத்தோம். ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு கொஞ்சம் பிஸ்கெட், தண்ணீர், 10 நிமிடம் ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப காரியத்தில் இறங்கினோம். மிக சீக்கிரம் எங்கள் டார்கெட்டை முடித்தோம். கரெக்டாக 8.30 மணிக்கு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை சுத்தமாக்கினோம்.



மொத்தமாய் 40 மூட்டை பிளாஸ்டிக் குப்பைகளை ஒரு இடத்தில் வைத்து அதன் பக்கத்தில் எங்கள் 30 பேரையும் நிறுத்தி விதவிதமாய் போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர் இதை ஏற்பாடு செய்த ட்ரெக்கிங் கிளப் அங்கத்தினர்கள்.

மொத்தம் 15 கி.மீ தூரத்திற்கு 800 பேக் குப்பை கலெக்ட் ஆனதாம்.அனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகள்.



இப்படி சுத்தம் செய்து முடித்ததும் எலியட்ஸ் பீச்சிற்கு அனைவரும் கிளம்பினோம். போகும் வழியில் நீலாங்கரை ஹாட்ஸ் சிப்ஸில் காலை உணவு முடித்துக் கொண்டோம். எலியட்ஸ் பீச்சில் எங்கள் குழுவினர் போல அங்கங்கே சுத்தம் செய்த மக்கள் வந்து சேர ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துக் கொண்டனர். அங்கேயும் குரூப் ஃபோட்டாக்கள் நிறைய எடுக்கப்பட்டது.


கடற்கரை சுத்தம் செய்வதற்க்காக இந்த குழுவினை ஆரம்பித்தவர் பீட்டர் வான் கெயிட். ஏழு மாதத்திற்கு பிறகு இப்பொழுது இரண்டாவது முறையாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சிறிய பிளாஸ்டிக் கப்புகள், உடைந்த தெர்மாகோல்கள்,குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி கப்புகள் தான் அதிகம் காணப்பட்டன.

Monday, January 10, 2011

திரும்பி பார்க்கிறே(ரா)ன்

நானும் எல்லா பதிவர்களை போலவும் போனவருட நிகழ்வுகளை திரும்பி பார்க்கிறேன் என்றால் என் மகன் ரிஷி நான் தீபாவளி அப்பவே இப்படி திரும்பி பார்த்துட்டேன் நீ வேற ஏன்மா இப்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிற வேண்டாம் என்கிறான்.

மேலே உள்ள ஃபோட்டா எடுக்கும் போது அவன் ஃபேண்ட் கீழே விழுந்துடப்போகுதோ என்று நான் கவலையில் இருக்க அவனோ தன் ஜட்டியின் பெயர் வெளியில் தெரியலையே என்ற கவலையில் இருந்தான்!!! கலிகாலம்.


இது காஷ்மீரை தன் மாமன் மகன் விஷாலுடன் திரும்பி பார்த்த போது கிளிக்கியது. 



Thursday, January 06, 2011

எங்க வீட்டு பிரியாணி

ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு சமையல் குறிப்பு எழுதலைனா, 100 பதிவு எழுதி என்ன பயன், நம்ம ப்ளாக்காண்டவர் மன்னிக்க மாட்டாரே என்று 101 ஆவது பதிவாக எங்க வீட்டில் நாங்க செய்யும் பிரியாணி இதோ.

தேவையான பொருட்கள்:

மட்டன் 1 கிலோ
சீரக சம்பா அரிசி 4 டம்ளர்
வெள்ளை பூண்டு 15 பல்
பெரிய வெங்காயம் 2
புதினா அரைக்கட்டு
தயிர் ஒரு கப்
இஞ்சி பெரிய துண்டு
உப்பு நுனிக்கையில் இரண்டு முறை
பட்டை 3
கிராம்பு 4
ஏலக்காய் 4
பச்சை மிளகாய் 6
நெய் அரை டம்ளர்
பொடி செய்த பட்டை 3 ஸ்பூன்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்

செய்முறை:

1.அரிசியினை நன்கு கழுவி 15 நிமிடம் ஒரு பாத்திரத்தில் ஊற போடுவேன்.
2.நறுக்கிய வெங்காயம்,தட்டிய பூண்டு, இரண்டாய் பிழந்த மிளகாய்,உருவிய புதினா,அரைத்த இஞ்சி இவை அனைத்தையும் ஒரு தட்டில் அழகாய் எடுத்து வைப்பேன்.
3.ஏலக்காய்,கிராம்பு,பட்டை,பட்டைப்பொடி,மிளகாய் பொடி இன்னொரு தட்டில் எடுத்து வைப்பேன்.
4. நெய்,தயிரை ஒவ்வொரு சின்ன கிண்ணத்தில் வைப்பேன்.
5. உப்பையும் அடுப்பின் பக்கத்தில் எடுத்து வைப்பேன்.
6. மட்டனை நன்கு கழுவி ஒரு கிண்ணத்தில் போட்டு அதனையும் அடுப்பின் பக்கத்தில் வைப்பேன்.

வெறும் குக்கரை அடுப்பில் வைத்து விட்டு என் கணவருக்கு,குக்கர் வைச்சுட்டேப்பா என்று ஒரு குரல் கொடுத்து விட்டு டி.வி பார்க்க உட்கார்ந்து விடுவேன்.

அடுத்த 10 நிமிடத்திற்கு சொய்ங்,சொய்ங் என்று கரண்டியால் வதக்கும் சத்தமும்,அசத்தலான வாசமும் வரும்.கொஞ்ச நேரத்தில் குக்கர் வெயிட் போட்டுட்டேன் என்று குரல் வரும்.அடுத்த 10 நிமிஷத்தில் குக்கர் இரண்டு விசில் சத்தம் கேட்டு போய் குக்கரை ஆஃப் செய்து விடுவேன்.குக்கர் திறக்க வெயிட் செய்யும் நேரத்தில் கிச்சன் கிளீன் செய்துடுவேன்.

அடுத்த 10 நிமிடத்தில் பசங்களா சாப்பிட வாங்க என்று ஒரு குரல் கொடுத்தால் பிரியாணி டேபிளுக்கு வந்து விடும். இப்படி தான் எங்க வீட்டில் பிரியாணி செய்வோம்.

என் கணவரின் க்ளோஸ் ஃப்ரெண்டு ஊட்டி பக்கத்தில் கோத்தகிரியில் டாக்டராக இருக்கிறார்.வருடம் இரண்டு முறையாவது என் கணவர் செய்யும் பிரியாணி சாப்பிடணும் அவருக்கு.இந்த பிரியாணிக்காக அடிக்கடி ஃபோன் செய்து கோத்தகிரிக்கு கூப்பிட்டு கொண்டே இருப்பார்.

நானும் ஓரிரு முறை சொய்ங், சொய்ங் என்று கரண்டியால் குக்கரில் சத்தம் செய்து பார்த்தாலும் அவர் செய்யும் பிரியாணி டேஸ்ட் வருவதேயில்லை. அதனால்,ரிஸ்க் எடுப்பதும் இல்லை.


Wednesday, January 05, 2011

பொருக்கிக்குடும்பம்@மெரினா

மெரீனாவை சுத்தப்படுத்தும் முயற்சியாக மொத்தம் 500 நபர்களை திரட்டும் முயற்சி நடந்துக் கொண்டு உள்ளது.

இடம்: மெரினா டூ ஈஞ்சம்பாக்கம் 15 கி.மீ.
நாங்கள் தேர்ந்தெடுத்த இடம்: கொட்டிவாக்கம்.
நாள்:  வரும் ஞாயிறு, ஜனவரி 9
நேரம்: காலை 5 மணியிலிருந்து காலை 10 மணிவரை.

நானும் என் பசங்க இரண்டு பேரும் ஒரு நாளாவது குனிந்து நிமிர்வோமே என்று ரிஜிஸ்டர் செய்துட்டோம்.

பார்த்துக்கோங்க மக்களே ஒரு குடும்பமே பொருக்கப்போகுது.

முடிந்தவர்கள் ரிஜிஸ்டர் செய்துடுங்க. சென்னை வாழ் மக்களே ஞாயிறு அன்று பீச்சில் மீட்டலாம்.

பல்புகள் நல்லது

கொஞ்ச மாதங்கள் முன்பு ஃபேஸ்புக்கில் என்னுடைய கஸினின் ஃப்ரெண்ட் ஃபோட்டாவை பார்த்து மெசேஜ் அனுப்பினேன்.பதிலே இல்லை. இரண்டும் மாதம் கழித்து திரும்ப ஒரு மெசேஜ் அனுப்பினேன். இம்முறை பதில் வந்தது. ஆமாம் உங்களை எனக்கு தெரிகிறது. இப்ப என்ன? உங்களுக்கு என்ன வேண்டும் ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் என்று கேட்டு இருந்தார் அந்த பெண்.அட ராமா இந்த பெண்ணிடம் நாம் என்ன பிச்சையா கேட்டோம்.தெரிந்தவராய் இருக்கிறாரே என்று தொடர்பு கொண்டால் அம்மணி இப்போ அமெரிக்காவில் இருப்பதால் இந்த அலட்டல் போலும்.
ஐந்து வருடம் முன்னால் என் கஸின் படித்த கல்லூரி ஹாஸ்ட்டலுக்கு கஸினை பார்க்க போன போது அக்கா அக்கா என்று என்னை ஒட்டிக் கொண்டு சுமார் 1000 ருபாய்க்கு எனக்கு தண்ட செலவு வைத்தவர் அந்த பெண். அப்பத்தான் முதல் நாள் என்னை பார்க்கிற மாதிரியே இல்லாமல் அக்கா நானும் சினிமா வரேன், எனக்கு இரண்டு மில்க் ஷேக் தான் வேண்டும், நானும் ஒரு ஜீன்ஸ் டாப்ஸ் எடுத்துக் கொள்கிறேன், என்று அப்போதே ஒரு மாதிரி வித்தியாசமாய் நடந்துக் கொண்டது அந்த பெண்.சரி சின்ன பெண் தானே என்று ஆசையாய் வாங்கிக் கொடுத்தேன். ஒரு வேளை அந்த பணத்தினை கேட்கதான் நான் மெசேஜ் அனுப்புவதாய் நினைத்து விட்டாரோ.செம பல்பு எனக்கு.
ஆனால்,இந்த பல்பு கொஞ்சமும் பிடிக்கலை.

மேலே ஃபோட்டாவில் இருக்கும் என் தம்பி மகன் வாண்டு விஷாலுக்கு இப்போது வயது 4. சார் UKG B section படிக்கிறார் அரை பரீட்சை லீவில் எங்கள் வீட்டில் தான் 10 நாள் டேரா.ஒரு ராத்திரி நாங்க இருவரும் தூங்க முயற்சி செய்துக் கொண்டு இருக்கும் போது லாலி, லாலி என்று தாலாட்டு பாட முயன்றேன்.மம்மி தூங்கும் போது ஏன் இப்படி டிஸ்டர்ப் செய்றீங்க என்று சிரிச்சுட்டே எனக்கு ஒரு பல்பு கொடுத்தான்.

கலர்ஸ் நேம்ஸ் எழுதலாமா,வெஜிடபிள் நேம்ஸ் படிக்கலாமா என்று குட்டி கேட்டது. லீவில் என்னடா படிப்பு சும்மா ஜாலியா இருடா என்றேன்.அச்சச்சோ ஜனவரியில் எண்ட்ரன்ஸ் எக்சாம் இருக்குதுல்ல அதுக்குதான் படிக்கணும் என்று ஒரு பல்பு கொடுத்தான். குரோம்பேட்டை சுந்தரவள்ளி மெமோரியல் ஸ்கூல் 1 ஆம் வகுப்பு அப்ளிகேஷன் வாங்கி இருக்கோம் குட்டிக்கு. அதை பற்றி, ஜனவரி 31-ல் நுழைவு தேர்வு பற்றி அவன் அப்பாவிடம் ஃபோனில் சொன்னதை நினைவு வைத்து சார் லீவிலும் ஒரே படிப்ஸ்.

நானும் அவனும் இரண்டு நாட்கள் வேலூர் போனோம்.தங்கக்கோயில் கார் பார்க்கிங் ஏரியா வரை போய்விட்டு கூட்டத்தினை பார்த்துட்டு ஒரே ஓட்டம்.அமிர்தி என்றொரு அருவிக்கு போனோம்.போனால் செவ்வாய் விடுமுறை என்று அங்கேயும் ஒரு பெரிய பல்பு கிடைத்தது.அருவி நீர் சில்லென்று ஆறாக வரும் இடத்தில் குட்டீசை குளிக்க செய்து ரிடர்ன் ஆனோம்.

இரண்டு பேரும் கமலின் மன்மத அம்பு படம் தியேட்டரில் பார்த்து ஒரு மிகப் பெரிய பல்பு வாங்கினோம்.செம்மொழி பூங்கா பார்க்கலாம்னு போனால் அய்யோடா என்னவொரு கூட்டம்.வாசலோடு ரிடர்ன்.இங்கேயும் மிகபெரிய பல்பு.

நியூ இயருக்கு முந்தின நாள் மாலை என் மகன் நகுல் வர லேட்டானதால் அவனிடம் ஃபோனில் ஏன் லேட்டு என விசாரித்துக் கொண்டு இருந்தேன். ஃபோனை வைத்ததும் குட்டி கேட்டான் மம்மி கிறிஸ்துமஸிற்கு எனக்கு கிஃப்ட் கொடுக்காததால், நியூ இயருக்கு கிஃப்ட் வாங்க போய் இப்ப நகுலுக்கு லேட்டாச்சான்னு.ஆகா எவ்வளவு பெரிய பல்பு. அப்புறம் நகுலுக்கு ஃபோன் செய்து குட்டிக்கு கிஃப்ட் வாங்கி வரச்சொன்னேன்.

இப்படி போன வருட கடைசியில் குட்டியிடம் நான் வாங்கிய சில பல பல்புகளால் எங்கள் வீடே புது வருடத்தில் பளிச்சென்று இருக்குது.அதனால் பல்புகள் நல்லது.


என் பசங்க இரண்டும் என்னை மம்மி என்று அழைப்பதால் போட்டிக்கு என் தம்பி மகனும் என்னை மம்மி என்று தான் அழைப்பான். எவ்வளவு சொல்லியும் என்னை அத்தை என்று கூப்பிடவே மாட்டான். அவன் அம்மாவை அம்மா என்று கூப்பிடுவான்.