Thursday, December 23, 2010

சாவி யார் கிட்ட இருக்கு?

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு போய் இருக்கீங்களா? வெயில் நேரத்தில் போனால் கொஞ்சம் பரவாயில்லை.மழை நேரத்தில் என்னை மாதிரி மிக தைரியமானவர்கள் போகலாம். வெங்காயம் அங்காச்சும் கம்மி விலையில் கிடைக்காதா என்ற நப்பாசையில் தைரியமா போனேன்.

இனி கோயம்பேடு மார்க்கெட் பற்றி..

மொத்த ஏரியா: 275 ஏக்கர்.

மார்க்கெட் செயல்படும் ஏரியா: 60 ஏக்கர்.ஆசியாவிலேயே மிக பெரிய மார்க்கெட்.

மொத்தகடைகள்:3500.பூக்கடை,காய்கறிகடை,பழக்கடை

தினம் வருகை தருபவர்கள்:ஒரு லட்சம் பேர்.

வருகை தரும் லாரிகள்: 700

லாரிகள் உள்ளே வருவதற்கு கலெக்ட் செய்யப்படும் தொகை:4 கோடி(ஒரு வருடத்திற்கு)

ஒரு நாள் கழிவு :160 டன்.

திட்டம்: தினக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க 5.5 கோடியில் ஒரு மையம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது மூடப்பட்டுள்ளது.

இப்பொழுது கழிவுகள் கொட்டப்படும் இடம்: மார்க்கெட் சுற்றி உள்ள இடமே.

பஸ்ல அல்லது கார்ல போகும் போது மார்க்கெட் வந்துடுச்சுன்னு எப்படி கண்டுபிடிப்பது:ஒரு மைலுக்கு முன்னாடியே மூக்கை பொத்திக் கொள்வீர்கள்.அப்படின்னா மார்க்கெட் நெருங்கிடுச்சுன்னு அர்த்தம்.

குப்பை போட்ட குற்றம் யார் மீது: சுத்தம் செய்யும் ராம்கே கம்பெனி சொல்லுது கடைக்காரர்கள் அவர்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் குப்பையினை போடுவதில்லை.அதில் தண்ணீர் பிடித்து வைக்க உபயோகிக்கிறார்கள்.கடைக்காரர்கள் சிலர் அந்த கேன்களை தங்கள் வீட்டிற்கு கொண்டு வைத்துக் கொண்டனர் என்றும் சொல்கிறது. சுத்தம் செய்ய தினம் ஒரு மூன்று மணிநேரமாவது மார்க்கெட் க்ளோஸ் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

கொடுங்கையூர் குப்பை மேடு தினம் மாலை 5 மணிக்கு மூடிவிடுவதால் எங்களால் அங்கு கொட்டமுடிவதில்லை என்று கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.

எதிர்காலம்: 13 கி.மீ செயிண்ட்தாமஸ் மவுண்ட்- கோயம்பேடு மெட்ரோ ரயில் 2013-ல் முடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.அதுவும் முடிந்தால் இன்னும் இன்னும் அதிக மக்கள் மார்க்கெட்டிற்கு போவார்கள். அதற்குள் மூடப்பட்ட அந்த திடக்கழிவு மின்சார மையத்தின் சாவி எங்கே இருக்கிறது என்று கண்டுப்பிடித்து திறக்க வேண்டும்.இல்லைனா ஆசியாவிலேயே அதிக நாற்றமடிக்கும் மார்க்கெட் என்று தான் பெயர் கிடைக்கும்.

ஒரு யூனிட் மின்சாரத்தினை ரூபாய் 4.50 கொடுத்து வாங்கிக் கொள்ள மின்சார துறை ரெடியாக இருக்கிறது.ஏன் அதிக பணம் போட்டு ஆரம்பித்த அந்த மையத்தினை இப்படி மூடி வைத்து மார்க்கெட்டினை நாற அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வேளை அந்த மையத்தின் சாவி குப்பையில் காணாமோ போச்சோ???






               வெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்.

Wednesday, December 15, 2010

புத்தம் புதுசா, சுத்தமா, குளிர்ச்சியா..

கட்டாயம் அனைவரும் போக வேண்டிய, பார்க்க வேண்டிய இடம்.அந்த இடத்தின் உள்ளே இருந்தாலே வெளியுலகம் மறந்து போகுது.இது வரை நான்கு தளங்களில் மக்களை அனுமதிக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மற்ற தளங்களிலும் மக்கள் அனுமதிக்கப் படுவார்கள்.கலைஞர் செய்த மிக அருமையான பணி இது.

இனி சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் பற்றி.

அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஆகஸ்டு 16, 2008.

தொடங்கப்பட்ட நாள்: 15, செப்டம்பர், 2010.

திறந்து வைத்தவர்: முதல்வர் திரு.கருணாநிதி.

நூலகம் இருக்கும் இடம்: காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்.

மொத்த செலவு: 172 கோடி.

மொத்த ஏரியா: 8 ஏக்கர்.

மொத்த பணியாளர்கள்: 200 நபர்கள்.

 1250 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்க முடியும்.

நுழைவு பகுதி: ஐந்து அடி உயரத்தில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்து இருக்கும் அறிஞர் அண்ணாவின் வெண்கல சிலை.

மொத்த தளங்கள்: 9, தரைத் தளத்தினையும் சேர்த்து.

தரைத்தளம்: ரிசப்சன் பகுதி, ப்ரெய்லி முறையில் படிப்பவர்களுக்கான புத்தகங்கள், இரண்டு கான்ப்ரென்ஸ் ஹால்கள்.

முதல் தளம்:குழந்தைகளுக்கான புத்தகங்களும்,நியூஸ்பேப்பர்கள், வார, மாத பத்திரிக்கைகளுக்கான இடமும், அனைத்து மொழி பத்திரிக்கைகளும் இருக்கின்றன.பெரிய ஹாலும்

இரண்டாவது தளம்: முழுவதும் தமிழ் புத்தகங்கள்.140 நபர்கள் அமரக்கூடிய புத்தக வெளீயீட்டு விழா நடத்த ஒரு ஹால்.

மூன்றாவது தளம்:  சமூகவியல், தத்துவம், உளவியல் புத்தகங்கள்.

நான்காவது தளம்: கம்யூட்டர் சயின்ஸ், மருத்துவம், இஞ்சினியரிங் புத்தகங்கள்.

எட்டாவது தளம்: எங்களை போன்றவர்கள் நூலகத்திற்கு கொடுத்த புத்தகங்களை வைக்கப் போகிறார்கள். நாங்கள் 80 ஆங்கிலப் புத்தகங்கள் கொடுத்தோம். என் மகன் காலேஜில் மார்ச் மாதம் கொடுத்து வந்தான்.எங்கள் பெயர் போட்டு தனி செல்ஃபில் வைப்பார்களா??

முக்கியமான செய்தி:ஃபுட் கோர்ட் திறக்கப் போகிறார்கள்.படிக்கும் போது தான் ரொம்ப பசிக்குது.

நூலகம் திறந்து இருக்கும் நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை.

புத்தகங்களின் எண்ணிக்கை: 12 லட்சம்.

கலைஞர் கொடுத்த புத்தகங்கள்:1000 புத்தகங்கள். இரண்டாவது தளத்தில் தனியாக ஒரு அடுக்கில் கலைஞர் பெயர் போட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
அனைத்தும் புத்தம் புதுசாய் இருக்கின்றன.

இன்னும் முடிக்கப்படாதவை:

1200 சீட் கொண்ட பெரிய ஆடிட்டோரியமும், மொட்டைமாடியில் 800 பேர் தரையில் அமரக்கூடிய திறந்த வெளி அரங்கு(amphitheatre), 1000 கார்களும், அதற்கு மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்களும் நிறுத்தக் கூடிய பார்க்கிங் ஏரியா.

இது வரை கலைஞர் தவிர யாரும் உறுப்பினராக சேரவில்லை. உறுப்பினர் சேர்க்கை பற்றியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.என்னை இரண்டாவது உறுப்பினராக சேர்த்துக் கொள்ள சொன்னேன்.
இன்னும் கணனிமயமாகவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

 நூலகத்தினை ஒட்டி 180 நபர்கள் அமரக்கூடிய உணவகம் திறக்கப்பட உள்ளது. அதன் மேல் தளத்தில் ஆய்வாளர்கள் தங்கி இருக்க அறைகள் கட்டப்படுகின்றன.

ஒவ்வொரு தளத்திலும் இண்டர்நெட் வசதி செய்யப்படுகின்றன.

அனைத்து புத்தகங்களிலும் RFID (radio frequency identification device)  என்னும் மைக்ரோ சாதனம் பொருத்தப்படும்.திருட்டுதனமாய் யாரேனும் புத்தகத்தை வெளியே எடுத்து செல்ல முயன்றால் அந்த சாதனம் காட்டிக் கொடுக்கும்.

493 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப் படுகின்றன. இரவில் யாரும் கட்டிடத்திற்குள் நுழைந்தாலும் இருட்டில் படம் பிடித்து விடும்.


ஓலைச்சுவடிகள் முதல் E-புக்ஸ் வரை அனைத்தும் உள்ளன.


டிஜிட்டல் நூலகம் யுனெஸ்கோவின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

நிறைகள்:

1.குழந்தைகளுக்கான பகுதியில் சுவரில் கார்ட்டூன் சித்திரங்களும், ஹாலின் நடுவில் ஒரு செயற்கை மரமும் அசத்தலாய் இருக்கிறது. கம்யூட்டரும், ஹெட்ஃபோனும், 1000 புத்தம் புதிய, சி.டிக்களும் இருந்தன.அருமையான இருக்கைகள் சிறுவர்களுக்கு, ஒரு விளையாட்டு கூடமும் உள்ளது.

2.மற்ற தளங்களில் உட்கார போடப்பட்டுள்ள சோபாக்கள் தரமானவைகளாய் உள்ளது. எழுதுவதற்காக போடப்பட்டுள்ள டேபிளும், அமரும் சேர்களும் வசதியாக உள்ளன.

3.லிப்ட்டும், அதனை இயக்க உதவியாளர்களும் உள்ளனர்.

4.அனைத்தும் புத்தம் புது வாசனையான புத்தகங்கள்.

5.ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறைகள் இருக்கின்றன.

6.கண்ணாடி சுவர்கள், ஜன்னல்கள்,எனவே படிக்கும் இடங்கள் நல்ல வெளிச்சமாய் இருக்கிறது. வெளியில் வேடிக்கைப் பார்க்கவும் முடிகிறது.

7.முழுவதும் குளிர்சாதன வசதி.

8.குழந்தைகளுக்கு உயரம் குறைவான சேர்களும், டேபிள்களும்.

குறைகள்:

பஸ் போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதியில் நூலகம் உள்ளது.

டாய்லெட்டுகளில் தரை எங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. தரை சமமாய் போடவில்லையா அல்லது உபயோகிப்போரின் செயலா தெரியவில்லை.பொது இடங்களில் சுத்தமற்ற கழிப்பறைகள் தான் நம் தலையெழுத்து போல.கூட்டம் அதிகம் இல்லாத போதே இந்த நிலைமை. இப்போதைக்கு இது இரண்டும் தான் குறை.

பஸ்/ட்ரையின்: 21G,5C,47C, MRTS கோட்டூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி
ஆட்டோவில் போகலாம்.இனிமேல் அதிக பஸ்கள் அரசு இயக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்த ரூட்டில் பஸ்கள் அனைத்தும் கூட்டமாக தான் செல்கின்றன.

பெண்களுக்கான அட்வைஸ்: ரிசப்ஷனில் பெண்களின் கைப்பைகளை டோக்கன் போட்டு வாங்கி வைத்துக் கொள்ளகின்றனர். எனவே. ஒரு பர்சும் கொண்டு சென்றால், அதில் பணம், பேனா, மூக்குக் கண்ணாடி, செல் ஃபோன், டோக்கன்,சீப்பு! ஆகியவற்றை வைத்து உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள்.

வெளிநாட்டில், வெளி ஊரில் இருக்கும் தமிழர்களுக்கான அட்வைஸ்: அடுத்து சென்னை வரும்போது கட்டாயம் விசிட் செய்யுங்கள்.நேரம் இல்லை என்று எல்லாம் சொல்ல கூடாது. ரங்கநாதன் தெருவிற்கு அடுத்த முறை செல்லலாம்.


                                         சிறுவர் பகுதி

முகப்புத்தோற்றம்






Sunday, December 12, 2010

இதை விதி என்பதா?

இந்த மாதத்துடன் 10 வருடங்கள் ஓடி போச்சு. பிரீஷியஸ் அவர்ஸ் என்று சொல்லப்படும் அந்த 3 மணி நேரத்திலேயே என் மாமா டாக்டரிடம் போய் தனக்கு உடலில் ஏதோ வித்தியாசம் உணர்வதாய் சொன்னார். மாமா பார்க்க சென்ற அந்த டாக்டரோ செக் செய்து விட்டு ஒன்றும் இல்லை முரளி நீங்கள் வீட்டிற்கு போகலாம் என்று அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் டி.வி பார்த்து விட்டு படுக்கை அறைக்கு சென்று லுங்கி மாற்றும் போது தடாலென்று கீழே விழுந்து விட்டார் மாமா.உடனே டாக்டரிடம் தூக்கி சென்றால் பராலிஸிஸ் என்று சொல்லி விட்டார்கள். மூன்று மணி நேரத்திற்கு முன்னே சென்ற போதே சரியாக செக் செய்து இருந்தால் இப்படி 10 வருடமாக நரக வாழ்க்கை என் மாமாவுக்கு இல்லை.உடனே மதுரைக்கு அழைத்து சென்றோம். அங்கே 2 மாதங்கள் ஹாஸ்பிட்டல் கதி என்று இருந்தார். பிறகு வேலூரில் ஒரு மாதம். இடது பக்கம் முழுவதும் இயங்காமல் 10 வருடங்களாய் வீட்டில் பொழுதினை கழித்து வருகிறார். அவர் நன்றாக இருந்து இருந்தால் வாழ்க்கை எப்படி எல்லாமோ மாறி இருக்கும்.

படிக்கும் போது அவர் படித்த பள்ளியில் முதலாவதாக வந்தவர்.முனிசிபல் பள்ளியில் படித்தவர்.பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருக்கு இவரை மிகவும் பிடிக்கும்.இப்பொழுதும் தன் முதல் வகுப்பு ஆசிரியரை பற்றி கூட சொல்வார்.எப்பொழுதும் சுத்தமாக டிப்டாப்பாக உடைகள் அணிவதில் பெரும் விருப்பம் உள்ளவர்.எங்களையும் சின்ன வயதில் மாடர்னாக இருக்க செய்தவர். சிறு வயதில் நாங்கள் பார்த்த நல்ல சினிமாக்கள் அவருடன் தான்.

முதலில் நான் பைக்கில் சென்றது அவருடன் தான்.முதலில் ஃப்ர்ஸ்ட் க்ளாசில் அமர்ந்து சினிமா பார்த்தது அவருடன் தான். வாழ்க்கையில் முதலில் கோன் ஐஸ்கிரீம், ஃபலூடா,பாசந்தி,ஜிகிர்தண்டா சாப்பிட்டது இவருடன் தான். மதுரையில் இங்கிலீஷ் படம் பார்த்தது,. அவரின் கல்லூரி நாட்கள்,பள்ளி நாட்கள் பற்றி கதை மாதிரி சொல்வதை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.நிறைய ஃப்ரெண்ட்ஸ் முரளி மாமாக்கு.

என்னுடைய மாமா குழந்தைகள் நல மருத்துவராக அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். இந்த நோய் தாக்கியதும் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தற்சமயம் புத்தகம் படிப்பது, டி.வி பார்ப்பது என்று பொழுதினை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.நிறைய படிக்கிறார். எப்போதும் படிப்பில் மிகுந்த ஆர்வம் உடையவர்.தெரிந்தவர்கள், சொந்தக்காரர்களின்
குழந்தைக்கு மருத்துவம் சொல்கிறார்.மிக கரெக்டாக நோயினை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பார்.என் மகன்கள் சிறுவயதில் கஷ்டப்பட்ட போது இவரின் ஆலோசனை பேரில் தான் பிழைத்தார்கள். குழந்தைகள் என்றால் மிக பிரியமுள்ளவர்.எனவே தான் குழந்தை நல மருத்துவர் ஆனார்.அவர் டாக்டர் ஆனதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

என் அம்மாவிற்கு எனக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்து, பிறந்த 6 மாதத்திலேயே ஹெர்னியா வந்து அதற்கு ஆபரேஷன் செய்தது.ஆனால், அடுத்த மாதத்தில்அக்குழந்தை இறந்து விட்டது.எனது அம்மாவும், தாத்தாவும் மாதக்கணக்கில் மதுரை ஆஸ்பத்திரிகளில் அந்த குழந்தை உடல்நலத்திற்காக அலைந்து இருக்கின்றனர். நம் வீட்டிலேயே ஒரு டாக்டர் அவசியம் வேண்டும் என அப்போது முடிவு எடுத்து உள்ளார்கள். அப்போது பி.யூ.சி படித்துக் கொண்டிருந்த என் மாமாவினை டாக்டர் ஆக்க வேண்டும் என்று என் அம்மாவின், தாத்தாவின் ஆசைப்படி டாக்டர் ஆனவர்.

ஒரு டாக்டருக்கே இந்த கதி என்றால். அவருக்கு இப்படி ஆனதை விதி என்பதா? மாமாவிற்கு சுகர் உண்டு. அதற்கு தகுந்த மருத்துவம் செய்து கொண்டு தான் இருந்தார். செக்-அப் சென்ற அந்த டாக்டரை நாங்கள் எல்லாம் இன்றும் திட்டுவோம்.ஆனால், மாமா எங்களை திட்டவே விட மாட்டார். விடுங்கம்மா என்ன செய்றது என்பார்.அவரை மாதம் ஒரு முறை பார்த்து வருவேன். அவருடைய ஃப்ரெண்ட்ஸ் யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பது அவருக்கு கவலை தரும் ஒரு விஷயம். சின்ன வயதில் என் மாமா மாமா என்று நான் படித்த பள்ளி, கல்லூரிகளில் பெருமைக் கொண்டதும் அவரால் தான்.ஏனெனில், என்னுடன் படித்தவர்களில் யாருக்கும் உறவுகளில் அப்போது
டாக்டர் இருந்தது கிடையாது.
தன் மகனுக்கு சுசுருதன் என்று பெயர் வைத்து அவனையும் டாக்டர் ஆக்கிவிட்டார். இந்தியாவில் முதல் மருத்துவர் ஹர்சவர்த்தனர் காலத்தில் சுசுருதர் என்பவர் ஆவார்.

Thursday, December 09, 2010

என்ன ஒரு வில்லத்தனம்...






மெயிலில் வந்தது.என்ன ஒரு கற்பனை.

என்ன அவசரம் ராஜி?

ராஜியை முதல் முதலில் என் கல்லூரி முதல் வருட முதல் நாளில் பார்த்தேன்.
எங்கள் வகுப்பில் மேக்ஸிமம் அனைவரும் பாவாடை தாவணியில் இருக்க நானும், ராஜியும் சுடிதாரில் இருந்தோம். நாங்கள் படித்த பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் மாணவிகளின் உடைக்கு பட்டபடிப்பு படிக்கும் போது எந்த கட்டுப்பாடும் கிடையாது.

சுடிதார், மிடி, கவுன்,பாவாடை சட்டை என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உடையில் போகலாம்.
அதனால் காலேஜ் போவதே ஜாலியா இருக்கும்.மூன்றாம் வருடம் தான் சில நாட்கள் சேலையில் சென்று இருக்கிறேன்.

என் அப்பா வேலை விஷயமாய் சென்னை போகும் போதெல்லாம் நல்ல ட்ரெஸ்களை வாங்கி வருவார். எனவே, தினம் விதமாய் ட்ரெஸ் போட்டு போவேன். தான் மட்டும் தான் அப்படி வரணும் என்று ராஜிக்கு அவ்வளாவாக என்னை பிடிக்காது.ஆனாலும் பேசிக் கொள்வோம்.ஏனெனில், என்னுடைய ஃப்ரெண்ட்களில் சிலர் அவளுக்கும் ஃப்ரெண்ட்ஸ்.

மிக ரோஷக்கார பெண் ராஜி. முதல் நாளில் பேசிய சில மாணவிகளிடம் மட்டும்தான் கடைசி வருஷம் வரை ஃப்ரெண்ட்ஸாக இருந்தாள்.

நானோ எங்க டிபார்ட்மெண்ட் இல்லாமல் பஸ் ஃப்ரெண்ட், ஆங்கிலம், தமிழ் கிளாஸ்ஸிற்கு சேர்ந்து உட்காரும் போது பாட்டனி, கெமிஸ்ட்ரி என்று அனைத்து பட்டப்படிப்பு மாணவிகளுடனும் அரட்டை அடிப்பேன்.

அவள் அம்மா கூட ஏதோ சின்ன மனஸ்தாபம் என்று ஃப்ரெண்ட்ஸ்களுடன் இனிமேல் எங்கும் வெளியில் போக மாட்டேன் என்று சொல்லி பிறகு அவள் அம்மா போக சொல்லியும் எங்களுடன் எங்கும் வராத பிடிவாதக்காரி.அவளுடைய அப்பாவிற்கு அவள் மிக செல்லமான பெண்.அதனால் மிக பெருமை படுவாள்.

நான் நேற்று பேசியதை இன்றே மறந்து விடும் ரகம்.

முதல் டெஸ்ட் மார்க் வந்தது. நான் அவளை விட அதிக மார்க் எடுத்திருந்தேன். அப்போதிலிருந்து போட்டி ஆரம்பித்தது.

ஆனால் கடைசி வருடம் வரை நான் தான் முதல்.

கமல் படம் என்றால் இருவருக்கும் உயிர்.நான் டவுணில் இருந்ததால் எல்லா படங்களையும் முதல் வாரமே பார்த்து விட்டு காலேஜிற்கு செல்வேன். என்னிடம் கதை கேட்க க்ளாசே காத்து இருக்கும்.
ராஜி மட்டும் என்னை கண்டுக் கொள்ளவே மாட்டாள்.

ஒரு முறை ஒரு கமல் படம் நான் மார்னிங் ஷோ பார்த்துட்டு வெளியில் வருகிறேன். ராஜி
மதிய ஷோவிற்கு தியேட்டரில் வெயிட் செய்கிறாள். என்னை பார்த்ததும் இந்த படம் உன்னை முந்தி நான் பார்ப்பேன் என்று நினைத்தேன். ஒரு ஷோவில் முந்திட்டியே என்று சொன்னாள்.நான் தான் முதலில் பார்க்கணும் என்று திட்டம் எதுவும் போடவில்லை.

பட்டபடிப்பு முடித்து நான் முதுகலை சேர்ந்தேன். அவள் வீட்டில் கோ-எஜுகேஷன் என்று அவளை முதுகலைக்கு அனுப்பவில்லை.பார்க்கும் இடங்களில் பேசிக் கொள்வோம்.

முதுகலை முடித்து அந்த வருடமே எனக்கு ஜூன் மாதம் 7-ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு ராஜி வந்த போது அவளின் திருமண பத்திரிக்கையினை எனக்கு தந்தாள். ஜூன் 15-ல் அவளின் திருமணம் என்று அப்போது தான் சொன்னாள்.இப்பவும் முந்திட்டே அமுதா என்று சிரித்துக் கொண்டே போனாள்.

அடுத்த வருடம் எனக்கு நகுல் பிறந்தான் ஜூலை 31-ல் அவளுக்கு ஆகஸ்ட் 29-ல் நிவேதிதா பிறந்தாள்.

அடுத்த இரண்டு வருடம் அவளுடன் தொடர்பே இல்லை. கணவ்ருக்கு ட்ரான்ஸ்ஃப்ர் ஆகி கொடைக்கானல் போனதாய் அவளை பற்றி கடைசியாய் நான் தெரிந்து கொண்டேன். போட்ட கடிதங்களுக்கு பதிலே இல்லை.எனவே நானும் செய்வதறியாது இருந்து விட்டேன்.

அதன் பின் ஒரு பத்து வருடங்கள் கழித்து மீனா என்ற இன்னொரு ஃப்ரெண்ட் மூலமாய் ராஜியினை பற்றி தெரிந்தது.

தெரிந்துக் கொள்ளாமல் போயிருக்கலாம் என நினைத்தேன். ராஜியின் குழந்தை 2 வருடத்தில் நிமோனியா தாக்கி இறந்து போனதாம். அவளின் கணவன் மிக பெரிய குடிகாரனாம்.ஒரு முறை கொடைக்கானலில் டூவீலரில் போகும் போது இரண்டு பேரும் கீழே விழுந்து அதில் ராஜிக்கு பெரியதாக அடிப்பட்டு அவள் அம்மா வீட்டில் 2 வருடம் படுத்த படுக்கையாக இருந்து இருக்கிறாள்.

ஃப்ரெண்ட்களிடம் இந்த விஷயத்தினை சொல்ல கூடாது என்று சொல்லி விட்டாளாம். மீனா அவளின் பின் வீட்டில் இருந்ததால் ராஜியினை அடிக்கடி பார்த்து இருக்கிறாள்.

உடல் நிலை மிக மோசமாக ஒரு நாள் ராஜி இறந்தும் விட்டாள். அவள் கணவன் குடித்து குடித்து அடுத்த ஒரு வருடத்திலேயே இறந்தும் போனாராம்.

மிக ப்ரெஸ்டிஜ் பார்க்கும் ராஜிக்கு ஏன் இந்த வாழ்க்கை.எப்பவும் எதிலும் நான் முந்திக் கொள்கிறேன் என்பதில் ராஜிக்கு பொறாமை உண்டு. ஆனால், சாவில் ராஜி முந்திக் கொண்டாள்.

சொந்தத்தில் திருமணம் செய்பவர்களை அவளுக்கு பிடிக்காது.கிண்டல் செய்வாள்.அப்படி செய்தால் சஸ்பென்ஸ் இருக்காது, சுவாரசியமாய் வாழ்க்கை இருக்காது என்பது அவளுடைய வாதம். அவளின் அக்கா, தங்கை இருவரும் சொந்தத்தில் திருமணம் முடித்து நன்றாக இருக்கிறார்கள்.

ராஜி எனக்கு ரொம்ப க்ளோஸான ஃப்ரெண்ட் இல்லை. ஆனால் அடிக்கடி அவளை நினைத்துக் கொள்வேன். திருநெல்வேலி போகும் போதெல்லாம் அவளின் வீட்டிற்கு சென்று அவள் பெற்றோரை பார்த்து விட்டு மிகுந்த மனவலியுடன் அவளை பற்றி நினைவு கூர்ந்து வருகிறேன்.என்ன அவசரம் ராஜி.

Thursday, December 02, 2010

எங்க வீட்டிற்கு வாங்க..

கொஞ்சம் கஷ்டப்பட்டு எங்க வீ ட்டிற்கு வந்தீங்க என்றால் இவ்வளவு அழகான ஹாலுக்குள் அமர்ந்து டீ குடிக்கலாம்.

அந்த கொஞ்சம் கஷ்டம் என்னனா அதாங்க எங்க வீட்டிற்கு வரும் வழி.

சரி ரூட் சொல்லாட்டா எப்படி.. உங்க வீட்டில் இருந்து ஒரு மேடு கொஞ்சம் சகதி தாண்டி அப்படியே லெப்ட்ல திரும்பினா ஒரு சின்ன குளம் வரும், வந்துச்சா கரெக்ட்.  அதை எப்படி தாண்டுவது என்பதெல்லம் உங்க பாடு. ஏன்னா அது எங்க வீட்டிற்கு பக்கத்தில் இல்லை. தாண்டியாச்சா ஓகே இப்ப மெயின் ரோட்டில ஐயங்கார் பேக்கரி  ரைட்ல வருதா.அதன் பக்கத்தில் ஒரு பள்ளம் வரும். அதை கிராஸ் செய்து காலில் சகதி ஆக்காமல் கரெக்டா ஒரு ஜம்ப் செய்து வந்தீங்கன்னா. பேக்கரி வாசலுக்கு வந்தாச்சா?பேக்கரியினை பார்த்ததும் இது வரை வந்த களைப்பு நீங்க, நீங்களாவே ஒரு பப்ஸ் சாப்பிட ஆரம்பிச்சாச்சா? சரி சாப்டாச்சா?


 அப்படியே ஒரு ரைட் திரும்பினா இப்படி இன்னொரு குட்டி குளம் வரும். மழை காலத்தில் மட்டும் குளம் இருக்கும். எனவே வெயில் காலத்தில் வந்து அந்த குளத்தை காணோம் என்று வடிவேலு மாதிரி கம்ளெய்ண்ட் செய்ய கூடாது. அங்க ஒரு லேடி நிற்கி்றார்களா, அது நான் இல்லை அது என் வீடும் இல்லை. ஓரமாய் கற்களின் மேல் ஏறி வந்தீங்கன்ன சுலபம்.
ஏன் சொல்றேனா இந்த பக்கம் சுவர் கட்ட பெரிய பெரிய குழி நான்குஇருக்கு. நீங்க பாட்டுக்கு உள்ளே போயிட போறீங்க. ஜாக்கிரதையா கற்கள் மீது ஏறி வந்துடுங்க. 

கற்களை தாண்டி ஒரு ஜம்ப் அப்படியே இரண்டு பாதை பிரியும்.
லெப்ட்ல நல்ல காலம் மேலே உள்ள தெருவில் இல்லை என் வீடு. கற்களை தாண்டியதும் அப்படியே ரைட்ல  திரும்பினா இந்த தெரு மட்டும் எப்பூடி?


திரும்ப ஒரு ரைட் இதோ எங்க தெரு வந்தாச்சு..

அதோ அந்த பெரிய கேட் போட்ட வீடு தான். அப்படியே ஓரமா வந்தீங்கன்ன ரீனா (எங்க dog) கத்திக் கொண்டு வரவேற்கும். சூ சொல்லிட்டு. நீங்க ஹாலுக்கு வந்தீங்கன்னா நாங்க இருப்போம். ஓ நீங்க டீயும், பப்ஸும் பேக்கரியிலேயே சாப்டாச்சா? சரி அடுத்த தடவை வெயில் காலமா பார்த்து வாங்க. என்ன குடிக்க தண்ணீர் இருக்குமா தெரியலை. வரும் போது ஒரு பாட்டில்
 தண்ணீர் கொண்டு வாங்க!!!