Tuesday, May 25, 2010

ஜம்மு என்ற செல்ல பிள்ளை...

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் செல்லப்பிள்ளை.நம் அரசு ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கும் ஒரு முக்கியமான மாநிலம். இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்து இந்த மாநிலத்தை பாதுகாத்து வருகிறது. இந்துக்கள் அதிகம் இல்லாத ஆனால் ஒரு இந்து பெயருடன் கூடிய தலைநகரை கொண்டது. ஸ்ரீநகர் ஸ்ரீ என்றால் லெட்சுமி என்ற பொருள்.

முதலில் மெளரியர்கள்,குஷாணர்கள் என பலரால் ஆளப்பட்டது. பின்னர் முஸ்ஸ்லீம் வசமானது முகலாயர்கள் கால்த்தில் தான்.முகலாயர்களில் ஒளரங்கசீப்பிற்கு பின்னால் சிக்கியர்கள் வசமானது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆங்கிலேயர்களால் மறைமுகமாக ஆளப்பட்டது. குலாப் சிங் என்ற மன்னர் ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார்.அவரின் வாரிசான ஹரிசிங் 1947-ல் இந்திய விடுதலைக்கு பிறகு காஷ்மீர் தனி நாடாக இருக்கவே விரும்பினார். ஆனால், பாகிஸ்தான் படையுடன் சேர்ந்து மேற்கு பகுதி முஸ்லீம்கள் காஷ்மீரினை தாக்கவும் இந்தியாவின் உதவியினை நாடினார். இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்தால் உதவுவதாக மவுண்ட்பேட்டன் சொல்லவும் அதற்கு ஒத்துக் கொண்டு 26 அக்டோபர் 1947-ல் இந்தியாவுடன் சேர விரும்பி கையெழுத்து இட்டார்.

அப்போது 77% முஸ்லீம்கள் காஷ்மீரில் இருத்தனர். இந்திய படைகள் ஸ்ரீநகரில் குவிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு 1949-ல் பாகம் பிரித்தது. பாகிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை கொடுக்க மறுக்கவே, இந்தியாவும் பொது வாக்கெடுப்பு எடுக்க மறுத்தது. காஷ்மீரில் இருந்து பிரிந்த பகுதி ஆசாத் ஜம்முகாஷ்மீர் ஆனது.

1965,1971,கார்கில் போர் 1999 மூலமாக ஜம்மு காஷ்மீரில் 30% பாகிஸ்தான் வசமானது. 1962 சீனா 10% காஷ்மீர் பகுதியினை எடுத்துக் கொண்டது. நம்மிடம் இருப்பது 60% தான். அந்த பகுதியினை ஜம்மு,காஷ்மீர் பள்ளதாக்கு, லடாக் என்று மூன்றாக பிரித்து அதை 22 மாவட்டங்களாக இந்திய அரசு பிரித்து உள்ளது. இந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஒரே ஒரு மாநிலமாகும். காஷ்மீர் பள்ளதாக்கில் முஸ்லீம்கள் அதிகம்,ஜம்முவில் ஹிந்துக்கள் அதிகம்,லடாக்கில் புத்தசமயத்தினர் அதிகம் உள்ளனர்.

கோடைகாலத்தில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு தலைநகராகவும் இயங்கி வருகிறது.

நம் இந்திய அரசியலமைப்பில் 370-ஆவது பிரிவு காஷ்மீருக்கு என்று சில தனிப்பட்ட சலுகைகளை தந்து உள்ளது. அதன்படி காஷ்மீருக்கு தனி அரசயலமைப்பு,தனி கொடி உள்ளது.

வெளி உறவு துறை,இராணுவம், தகவல் தொடர்பு போன்ற துறைகளுக்கு மட்டும் தான் இந்திய பாரளுமன்றம் இந்த மாநிலத்திற்கு சட்டம் இயற்ற முடியும்.மற்ற அனைத்து துறைகளும் ஜம்மு காஷ்மீரினை கட்டுப்படுத்த முடியாது.

இந்தியாவின் மற்ற மாநிலத்தில் வாழும் இந்திய பிரஜை எவரும், காஷ்மீர் பெண்ணை மணந்த வேறு மாநிலத்தினை சேர்ந்த எவரும் ஜம்மு காஷ்மீரில் சொத்துக்கள் வாங்க முடியாது. இந்த சட்டத்தினால் பாகிஸ்தானிற்கு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என்ற எண்ணம் வலுக்கிறது.

காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் சொந்த மாநிலத்திலெயே அகதிகள் போல் வாழ்ந்து வருகிறார்கள். காஷ்மீர் பள்ளதாக்கில் இருந்த 1,50,000 காஷ்மீரி பண்டிட்கள் எனப்படும் பிராமணர்கள் 1990-ல் காஷ்மீர் பள்ளதாக்கினை விட்டு ஜம்முவில்,டில்லியில் தஞ்சம் புகுந்து தங்கள் சொத்துக்கள் அனைத்தினையும் இழந்து வாழ்ந்து வருகிறார்கள். தீவிரவாதிகளின் தொல்லையால் இந்த முடிவினை எடுத்தார்கள். நிரட்ந்தரமாக ஸ்ரீநகரில் அவர்கள் இப்பொழுது வந்து தங்கினால் இளைஞர்களுக்கு அரசு வேலை தருவதாய் சொல்லி உள்ளார்கள்.

எல்லா பிரச்சனையும் முடிந்து நிம்மதியாக வாழ வழியில்லாமல் ஆங்கிலேயர்கள் அன்றே மத வேறுபாடு என்ற விதை விதைத்து சென்று விட்டார்கள்.

Monday, May 17, 2010

காஷ்மீர் போலாமா-குல்மார்க்

ஸ்ரீநகரில் இரவு நன்கு குளிர் உள்ளது. போகும் இடம் எல்லாம் ஆப்பிள் மரங்கள் நிறைய பார்த்தோம். தீபாவளி சமயம் தான் ஆப்பிள்கள காய்க்குமாம். ஸ்ரீநகரில் இருந்து 57 கி.மீ தூரத்தில் உள்ள குல்மார்க்கிற்கு போனோம்.1 மணிநேரம் பயணம். காலையில் மிக வேகமாக கிளம்பினோம். ஆனால், எங்களை விட மிக வேகமாக அதிகம் பேர் அங்கு வந்திருந்தனர். கோண்டாலா எனப்படும் கேபிள்கார் பனிமலைக்கு நம்மை அழைத்து செல்கிறது.
டிக்கெட் எடுக்க மிகப்பெரிய வரிசையில் ஹிந்திவாலாக்களுடன் சண்டை போட்டு நின்று டிக்கெட் வாங்க வேண்டி இருக்கிறது. கோங்தோரி என்ற இடம் வரை போக 300 ரூபாயும், அதற்கு மேல் முழுவதும் பனி மலை மேலே போக இன்னும் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். முதல் பாயிண்ட்லேயே பயங்கரமாய் குளிர் ஆரம்பிக்கிறது.

அதையும் தாண்டி இரண்டாவது பாயிண்ட் செல்வதற்கு கேபிள் காரில் ஏறினோம். கீழே எங்கு பார்த்தாலும் பனி தான். கேபிள் கார் இரண்டாவது பாயிண்டில் நம்மை இறக்கி விட்டதும் கீழே இப்படி
இருக்கும் படியில் இறங்கினால் பனி புயல் மாதிரி காற்றும் பனியும் கொட்டி கொண்டு இருந்தது. எல்லோருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஆனால் ரொம்ப நேரம் அதில் நிற்க முடியவில்லை. வெள்ளை பனி மலை மீது உலாவுவோம் என்று கொஞ்ச நேரம் உலாவி விட்டு கஷ்டப்பட்டு ஃபோட்டாக்கள் எடுத்துக் கொண்டு (வரலாறு ரொம்ப முக்கியம்) கிளம்பினோம். மிக நல்ல அனுபவம்.
கையில் பனிதுகள்களை அள்ளி எடுத்தாலே கெட்டியாகி நாம் உருட்டும் ஷேப்பிற்கு வருகிறது.
மே மாதமும் குல்மார்க் இப்படி தான் இருக்குமாம். காஷ்மீர் இப்பொழுது எந்த பயமும் இல்லாமல் போய் வரலாம். எங்கு பார்த்தாலும் மிலிட்டரி வேன்கள். மத்திய ரிசர்வ் போலீசாருக்கு தான் மிக அதிகம் வேலை.டூரிஸ்ட்களுக்கு மிக தகுந்த பாதுகாப்பு இப்பொழுது உள்ளது. முஸ்லீம் நண்பர்கள் தான் இங்கு அதிகம் தென்படுகிறார்கள். நாங்கள் தங்கி இருந்த படகின் ஓனர் முஸ்லீம். அவரின் வயதான தந்தை அவரை நாங்கள் பார்க்கும் போதெல்லாம் தொழுகையில் இருந்தார். அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டோம்.மிக அன்பாக உபசரித்தார். மிக நல்ல ஒரு ட்ரிப்பாக எங்களுக்கு இந்த காஷ்மீர் அனுபவம் அமைந்தது. வசதிப்படும் நண்பர்கள் சென்று வாருங்கள்.

Friday, May 14, 2010

காஷ்மீர் போலாமா--ஸ்ரீநகர்

ஸ்ரீநகர் பற்றி கொஞ்சமா ஜி.கே..
ஸ்ரீநகரின் குறுக்கே ஓடும் ஜீலம் நதியின் மேல் கட்டப்பட்டு உள்ள 9 பாலங்கள் ஸ்ரீநகரை இணைக்கின்றன. டூரிசத்தினை நம்பியே இந்த நகரின் பொருளாதாரம் உள்ளது. கிரிக்கெட் பேட்கள் செய்யப்படும் வில்லோ மரம் இங்கு அதிகம் காணப்படுகிறது. குங்குமபூவினால் அதிகம் அந்நிய செலவாணி கிடைக்கிறது. ஆப்பிள்,ரோஜா மலர்கள்,ஆப்ரிகாட்,செர்ரி,பாதாம்,அக்ரூட் முதலியவைகள் அதிகம் விளைகிறது. வைஷ்ணவி தேவி, அமர்நாத் யாத்திரை மூலமாக அதிகம் வருமானம் இந்த மாநிலத்திற்கு கிடைக்கிறது. சமீப காலங்களில் மீண்டும் யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

நம் படையினரில் சிலர்,
ஜீலம் நதியானது மிக ஃபேமஸான தால் ஏரியில் கலக்கும் இடத்திற்கு அருகிலேயே எங்கள் படகு வீடு இருந்தது. தால் ஏரியில் சிக்காரா எனப்படும் சிறிய படகில்பயணம் செய்தோம். 2 மணிநேரம் மெதுவாக இந்த படகுகளை ஓட்டுகிறார்கள். நம் படகின் அருகிலேயே வியாபாரம் செய்யும் படகுகள வந்து விட நாம் வழக்கம் போல் பேரம் செய்து பாசி,ஸ்வெட்டர்,ஷால் என்று வாங்கினோம்.
ஜெமினி கணேஷும், வைஜெயந்தி மாலாவும் போனது போல் வாட்டர் ஸ்கேட்டிங் செய்ய ஆசைப் பட்டு அதிலும் சென்று பார்க்கலாம் என்று லைஃப் ஜாக்கெட் போட்டு தயார் ஆகி ஒவ்வொருவராய் போய் வந்தோம். சின்ன ரவுண்ட் தான் கூட்டி போகிறார்கள். ஆனால், அற்புத அனுபவம். போட்டுடன் கட்டப்பட்ட்ட ஒரு மர ஷீட்டில் நம்மை நிற்க வைத்து போட் ஸ்பீடாய் போகிறது. ஆரம்பத்தில் ஒரு ஜர்க் ஆகி பின் நாமெ நம்மை அஜஸ்ட் செய்து நிற்க முடிகிறது.

ஸ்ரீநகரில் முகல்தர்பார் என்ற மிக ஃபேமஸான ஹோட்டலில் மதியம் சாப்பிட்டோம். பிரியாணியிலிருந்து எண்ணெய் பிழிந்து எடுக்கலாம் அவ்வளவு எண்ணெய்.

முகலாய மன்னர் ஜஹாங்கீரால் ஏற்படுத்த பட்ட நான்கு பூங்காங்கள் மிக அழகாக உள்ளன. மதியம், மாலை முழுவதும் அந்த பூங்காக்களில் செல்விட்டோம்.ஷாலிமர் பூங்காவில் இயற்கையாக உள்ள ஒரு நீர் ஊற்றின் நீர் தித்திப்பாய் இருந்தது. இங்கு இருந்து தான் நேரு குடும்பத்திற்கு தண்ணீர் போகும் என்று சொல்கிறார்கள். எவ்வள்வு உண்மை என்று தெரியவில்லை.
இன்னும் வரும்....

Wednesday, May 12, 2010

காஷ்மீர் போலாமா-சோன்மார்க்

போட் ஹவுஸ் எனப்படும் நூற்றுக் கணக்கான ஜீலம் நதியில் மிதக்கும் படகு வீடுகள் ஸ்ரீநகரில் வந்ததே ஒரு விபத்து என்று தான் சொல்லவேண்டும். அங்கு ஆண்ட மன்னர் ஆங்கிலேயேர்களை நிலத்தில் வீடுகள் கட்ட அனுமதி மறுத்ததால் அவர்கள் இந்த படகு வீடுகளைக் கட்டினராம். இன்றைய மதிப்பில் ஒரு படகு வீடானது ஒரு கோடி ரூபாய் ஆகும். குடும்பத்தினர் பரம்பரையாக இந்த வீடுகளை பராமரித்து வருகிறார்கள். படகில் சமைத்தும் தருகிறார்கள் . சமையலறையினை வாடகைக்கும் விடுகிறார்கள். நாமே சமைத்தும் சாப்பிடலாம். ஒரு 4 நாட்களாவது ஆண்களை ஃப்ரீயா விட்டுவிடலாம் என்று சமைக்க வேண்டாம் என்று சொல்லி, போட்டிலேயே சாப்பாடு ஆர்டர் செய்து விட்டோம்.

நாங்கள் 13 பேரும் தங்கி கொள்ளும் அளவிற்கு மூன்று பெரிய ரூம்களுடன், ஒரு பெரிய ஹாலுடன் அட்டகாசமாய் இருந்தது நாங்கள் தங்கி இருந்த படகு வீடு.படகு ரொம்ப ஸ்பீடாய் போகுது ஜாக்கிரதை என குழந்தைகளை எச்சரித்து விட்டு(சும்மாச்சும்) ஓடும் ஜீலம் நீரை வேடிக்கை காண்பித்து விட்டு இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க போனோம்.

படகு காரரிடம் காலை உணவு ஆம்லெட்,ப்ரெட் ஆர்டர் செய்தோம். அவர் பூவா,பூவா செய்து தரவா என்று கேட்டார். நான் தான் வரும் இடம் எல்லாம் சும்மா தோசை என்று பறக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன பூவா 3 ஆர்டர் சொல்லிவிட்டேன்.என்னவென்றே தெரியாததால் காலையில் பூவா அனைத்தும் எனக்கு தான் என்று நம் படையினர் சொன்னார்கள். காலையில் பூவாவை திறந்து பார்த்தால் அது நாம் செய்யும் அவல் உப்புமா!!!நன்றாகவே இருந்தது பூவா...சாப்பிட்டுட்டு சோன்மார்க் செல்ல தயாரானோம். தங்க நிலம் என்று அர்த்தமாம். கடுகு செடியின் மஞ்சள் பூக்கள் வழி நெடுக இருக்குமாம் மே மாதம் தான் சீசனாம். இப்ப்அகொஞ்சமாய் பூத்து இருந்தது.

நம்ம
மியாவ் 2 மணிநேரத்தில் சோன்மார்க்கில் இறக்கி விட்டார். கொஞ்சமாய் மழை பெய்து கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் சுற்றிலும் தூரத்தில் பனி மலை. காரை விட்டு இறங்கியதும்,குதிரைக்காரர்கள் கூட்டம் கூடியது நம் படையினை சுற்றி. நம் படையினருக்கு ஏற்கனவே, குதிரை ஏறத்தெரிந்து இருந்ததால் ஆளுக்கு ஒரு குதிரையில் வாடகைக்கு குளிர்கால உடைகளை வாங்கி அணிந்துக் கொண்டு ஏதோ நிலாவில் இறங்க போகும் தோரணையில் புறப்பட்டனர். பாதையே இல்லாமல் கல்,மண்,மேடு,பள்ளம் என்று சவாரி ஆரம்பம் ஆனது.மழை வேறு அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. நம் உயிர் நம் கையிலேயே இல்லை. கூட யார் வருகிறார்கள் என்று தெரியவில்லை. கையெல்லாம் மரத்து போனது. குதிரையையும் அதன் பையாவையும் நம்பி பயணம் ஆரம்பித்தது. மிக பள்ளமான இடங்களில் கண்களை இறுக்க மூடி கொண்டனர் அனைவரும்.அதை நான் ஓட்டை கண் விட்டு பார்த்தேன். ஒரு மணிநேரத்திற்கு அப்புறம் இந்த தாஜிவாஸ் கிளேசியர்ஸில் குதிரை நம்மை இறக்கி விட்டது. தப்பிச்சோம் பிழைத்தோம் என்று இறங்கி அங்கிருந்த ஒரு டீடெண்ட்டிற்குள் நுழைந்தோம். அங்கு தாக சாந்தி செய்துக் கொண்டு 30 நிமிஷம் நெருப்பின் அருகில் இருந்துவிட்டு கார் இருக்குமிடம் போக தான் வேண்டும் குதிரையினை விட்டால் வேறு வழி இல்லை என்று ஒரு மனதாக ஏறினோம். குதிரைக்காரர் அதிகாரிகளை தம் அடிக்க ஒதுங்கி கொள்ளவே நாமே நம்மையும் நம் குதிரையையும் பார்த்துக் கொண்டோம். கை,காலெல்லாம் மரத்துப் போனது. நிறைய போட்டாக்கள் எடுக்க படையினரின் கை வேலை செய்யவில்லை ஆனால் ஆளுக்கு ஒரு கேமிரா என்று கழுத்தில் ஏதோ தங்கபதக்கம் மாதிரி தொங்க விட்டிருந்தோம்.
நாங்கள் எதிர்பார்த்த பவுடர் மாதிரியான பனி துகள்கள் இங்கு இல்லை. அடர்த்தியான பனி போர்த்திய மலை தான் இங்கு இருந்தது.

இன்னும் வரும்...