Monday, November 08, 2010

அந்த 23 நாட்கள்...

அந்த 23 நாட்களை இந்த ஜென்மத்தில் மறக்க முடியாது. உன் பையனுக்கு மூளை காய்ச்சல் வந்திருக்கு எங்க உன்னுடைய டாக்டர் மாமா உடனே இன்னைக்கு அவரை வரச்சொல்லு அவரிடம் பேசணும் என்று கண்ணகி என்ற அந்த குழந்தை நல மருத்துவர் என்னிடம் சொன்னபோது அப்படியே அந்த ஆஸ்பத்திரியின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து விடுவோமா என்று தான் ஒரு கணம் தோன்றியது.

அழுது அழுது வீங்கிய கண்களுடன் கொதிக்க கொதிக்க இருந்த என் பையன் நகுலை இறுக்க அணைத்துக் கொண்டு என் மாமாவிற்கு விஷயத்தினை சொல்லி விட்டு அவர் வருகைக்காக காத்து இருந்தேன். குழந்தை மருத்துவரான அவர் திண்டுக்கல்லில் இருந்து சென்னை வர வேண்டும்.பச்சை தண்ணீரில் வெள்ளை துணியினை நனைத்து நனைத்து நகுலின் நெஞ்சு தவிர அனைத்து பகுதியிலும் துடைத்து விட்டு கொண்டே இருந்தேன்.ஒரு பக்கம் ட்ரிப் ஏறி கொண்டு இருந்தது. பிறந்து 15 நாட்களே ஆன என் நகுலுக்கு அன்று மட்டும் 20 முறை ஃபிட்ஸ் வந்தது. அது வரும் ஒவ்வொரு முறையும் கண்ட்ரோலே செய்ய முடியாத அளவிற்கு பயந்தது போல் அழுவான். ஃபிட்ஸ் வந்த பின்னாடி ஆக்சிஜன் மாஸ்க் வைக்க வேண்டும். நானும் கூடவே அழுதுக் கொண்டு அவனை கவனித்துக் கொண்டேன்.

பிறந்து 30 நாட்கள் மட்டுமே ஆன குழந்தைகள் மட்டும் உள்ள வார்டு அது. குழந்தை அதன் அம்மா மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே குழந்தை பிறந்து பயங்கர வீக்காகி போன உடம்பு, இப்ப மனதும் வீக்காகி போனது. எப்படியும் குழந்தையுடன் தான் வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருக்கும்.

என் மாமா வந்ததும் அவருடன் டாக்டர்கள் பேசினார்கள்.மாமாவின் முகம் பார்க்கவே நல்லாயில்லை. என் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு நகுல் நன்கு பால் குடிக்கிறானா? எவ்வளவு குடிக்க வைக்க முடியுமோ அவ்வளவு குடிக்க வை.ஒன்றும் ஆகாது என்று சொல்லி சென்றார். மூன்றாவது முறையாக அவனது முதுகு தண்டுவடத்தில் ஒரு பெரிய ஊசியினை நுழைத்து தண்டுவட நீரை எடுத்து டெஸ்ட்டிற்கு அனுப்பினர். 3 நாட்களாக தூங்காமல் அழுதுக் கொண்டே இருந்தது வேறு எதோ ஒரு மிதக்கும் மயக்க நிலையில் நான் இருந்தேன். தனியே வேறு குழந்தையினை கவனித்துக் கொள்ள வேண்டும்.மறுநாள் ரிசல்ட் வந்தது.மூளைகாய்ச்சல் இல்லை என்று ரிப்போர்ட்டில் இருந்தது. அது வரை அனலாக சுட்டுக் கொண்டு இருந்த நகுலும் இப்போது மிதமானான்.

கால்ஷியம் குறைபாடும், தைராய்டுபிரச்சனையும் தான் ஃபிட்ஸ்க்கு காரணம் என்று அடுத்து செய்த இரத்த பரிசோதனையில் தெரிய வந்தது. உடனே என்டோகிரோனாலஜி டிபார்ட்மண்டின் டாக்டர் சுந்தர்ராமனை பார்க்க சென்றோம். அவரின் மிகுந்த அக்கறையான கவனிப்பால் என் நகுலின் ஃபிட்ஸ் 3 நாட்களில் மட்டுப்பட்டது. தினம் கால்ஷியம் ஷிரப்,விட்டமின் டி3 மாத்திரை ஒன்று, தினம் ஒரு எல்ட்ராக்ஸின்(தைராய்டிற்கு) என்று அவன் பிறந்த 22 நாளில் இருந்து கொடுக்க ஆரம்பித்தோம்.வாரம் ஒரு முறை கால்ஷியம் இன்ஜெக்‌ஷன் போடப்பட்டது.

அவன் பிறந்து 10 வது நாளில் அவனுடன் அந்த ஆஸ்பத்திரியில் நுழைந்த நான் அவனின் 33 வது நாளில் வெளியுலகை பார்த்தேன். 23 நாட்களில் ஒரு வாரம் மட்டுமே ஒழுங்காய் தூங்கி இருப்பேன்.23 நாட்களும் அவனுக்கு கை,காலில் எங்காவது ட்ரிப் ஏறிக் கொண்டு இருக்கும். ஃபிட்ஸ் வரும் போதெல்லாம் ஆக்ஸிஜன் வைக்க வேண்டும். ட்ரிப் ஏறிக் கொண்டு இருக்கும் இடத்தில் ஒரு கட்டையினை வைத்து பிளாஸ்டரால் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கை, காலை ஆட்டும் போது என் தலையில் தினம் 10 அடியாவது விழும்.ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துற என்று நகுல் என்னை அடிப்பதாய் நினைத்துக் கொள்வேன். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு வந்த பின் முதுகில் கிராஸாய் சில நாட்கள் போடப்பட்டிருந்த ப்ளாஸ்டரால் அந்த இடத்தில் மட்டும் முடி இல்லமல் ஏதோ கிராஸாய் வரைந்தது போல் இருக்கும். கை, காலில் பொடி பொடி துளைகளாய் கண்ணிப்போய் இருக்கும்.நாட்கள் ஆக ஆக ஒவ்வொன்றாய் மறைந்தது.

மாதம் ஒரு முறை ஆஸ்பத்திரி போக வேண்டும். பிறக்கும் போது 4 கிலோவாய் இருந்த நகுல் குண்டு குழந்தையாக வளர்ந்தான். இரத்த பரிசோதனைக்கு இரத்தம் எடுக்க வெயின் கிடைக்காமல் எப்போதும் தொடை இடுக்கில் தான் இரத்தம் எடுப்பார்கள். காலை ஆட்டாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். பிடித்துக் கொண்டே அவனுடன் நானும் அழுவேன்.ஐந்து வயது வரை தினம் 10 கால்ஷியம் மாத்திரை கொடுக்க வேண்டும். மிக்ஸியில் 100 மாத்திரைகளை பொடி செய்து வைத்து தினம் 10 மாத்திரை அளவில் ஒரு சின்ன கிண்ணத்தில் அந்த பொடியினை எடுத்து தண்ணீரில் கெட்டியாக கலந்து வைத்து அவன் நாக்கில் அவ்வப்போது தடவி விட்டு விடுவேன்.

இப்பவும் தைராய்டு மாத்திரை மட்டும் ஒன்று சாப்பிடும் நகுல் அதை கையில் எடுத்து கொடுத்தால் தான் சாப்பிடுவான். மாதம் ஒரு முறை என்ற இரத்த பரிசோதனை அப்புறம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அப்புறம் வருடத்திற்கு ஒரு முறை என்று குறைந்தது.

இப்படி மறுபிறவி எடுத்து வந்தான் என் மகன் நகுல். இப்பவும் அந்த ஆஸ்பத்திரியினை கடக்கும் போது எல்லாம் இனம் புரியாத ஒரு பயம் எனக்கு வருகிறது.



9 comments:

நசரேயன் said...

உங்கள் உணர்வுகள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ..

ஹுஸைனம்மா said...

Too shocking to read. What caused this calcium deficiency & thyroid problem in a newborn baby?

Happy that he is alright now.

(Sorry for English)

சுசி said...

அமுதா.. என்ன சொல்றதுன்னு தெரில..

வார்த்தையே வர்லங்க..

Chitra said...

I praise and thank the Lord for this miracle!!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

என் மர்றும் எங்க வீட்டு குழந்தைகளோடு மருத்துவமனையில் நானும் பல தடவை போராடியதால் உங்கள் வலி புரிந்தது...

நானும் தனிஹ்யே இப்படி கஷ்டப்பட்டேன்..பிரசவம் வேறு அறுவை சிகிச்சை.. அந்த வலியோடும்..

வாழ்த்துகள் நகுலுக்கு,..

எண்ணங்கள் 13189034291840215795 said...

தின்னேலிதானா நீங்களும்.?:)

சுந்தரா said...

வாசிக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருக்குது அமுதா.

உங்கள் மகன் இனி எப்பவும் சுகமாய் சௌக்கியமாய் இருக்க இறையருள் துணைநிற்கட்டும்.

அமுதா கிருஷ்ணா said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி..

ஆமினா said...

அழுதே விட்டேன். நல்லவேளை குழந்தை நலம் என்ற சேதி கேட்டதும் தான் மனம் அமைதியானது.....