Monday, December 28, 2009

நடந்தது என்ன???

ஒரு வருடத்தில் நடந்தவைகள் அனைத்தையும் திரும்பி பார்ப்பதும் ஒரு அனுபவம் தான். எல்லா வருடமும் போல் மகிழ்ச்சியும், கவலையும் இரண்டும் கலந்து இருந்தது போன வருடம். சில விஷயங்கள் நமக்கு நல்லதாய் இருப்பது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கெட்டதாய் இருக்கும்.

1. நான் முதன் முறையாக வெளிநாடு போனது எனக்கு மகிழ்ச்சி.(மலேஷியா,சிங்கப்பூர்). என் பையன்கள் என்னை விட்டு முதன் முறையாக ஒரு மாதம் இங்கே இருந்ததும்,என் கணவருக்கு நான் செலவு வைத்ததும் அவர்களுக்கு கெட்டது தானே.

2. மாதம் ஒன்று அல்லது இரண்டு பதிவு எழுதியது எனக்கு மகிழ்ச்சி. பொறுமையாய் படித்தவர்கள் பாடு திண்டாட்டம் தானே.

3. ரொம்ப நாளாக ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று முயன்ற என் மாமா பையன் ஜூனில் திநகரில் திண்டுக்கல் பங்காரு ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பித்தது மகிழ்ச்சி தந்தது. ஆனால், மற்ற ஹோட்டல்களுக்கு இது ஒரு போட்டி என்பதால் அவர்களுக்கு கவலை தானே.

4. முதல் முதலாக சென்னையில் பதிவர் சந்திப்புக்கு சென்றது எனக்கு மகிழ்ச்சி. ஆனால், ஒரு பெண் பதிவர்கள் கூட வராதது கவலை தந்தது.

5.34 வருடங்களாக என்னுடனே இருந்து பேசி, சிரித்த என்னுடைய இளைய சகோதரன் பிரபு என்னுடன் பேச்சை நிறுத்தி கொண்டதுடன் என்னை தப்பாக புரிந்துக் கொண்டு என்னை அழ அழ வைத்ததும் இந்த வருடத்தில் தான். கூட பிறந்தவன் கூட எதிரியும் ஆவான் என்று புரிந்தது. என்னுடன் பேசாதது அவனுக்கு மகிழ்ச்சியோ. நானும் மகிழ கற்றுக் கொள்ளணும் இந்த விஷயத்தில்.

5. நண்பர் முத்துராமன் முதலில் கிழக்கு பதிப்பகத்தில் இருந்தார்.பின் தமிழக அரசியல் பத்திரிக்கையில் இருந்தார். கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, டயாலிஸிஸ் செய்து கொண்டு ஆபரேஷனுக்கு காத்து இருப்பது மிக கவலை தரும் ஒரு நிகழ்வு.

6. இந்த டிசம்பரில் ஏ.சி.எஸ் இண்டர் பரீட்சை எழுதி உள்ளான் என் பெரிய பையன்.மிக கஷ்டமான ஒரு தேர்வு. வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.

7. என் தோழி ஜெயாவின் கணவர் ஆர்மியில் உள்ளார். என் தோழி ஜெயா தனது பெண்களின் படிப்பிற்காக சென்னை வந்து செட்டில் ஆனது எனக்கு மகிழ்ச்சி. ஆனால்,பாவம் அவள் கணவர் தனியே நாசிக்கில் கவலையுடன் இருக்கிறார்.

8. இன்னொரு தோழி நிர்மலா ஃபேமிலியுடன் மேயில் பெங்களூரு போய் திடீரென்று செட்டில் ஆனது எனக்கு மிக வருத்தம். ஆனால், அவள் கணவர் ராபினுக்கு மிக சந்தோஷம்.

9. 5 வருடங்களுக்கு முன் சாட்டில் அறிமுகமான பானக்காலு என்ற ஆந்திர தம்பியின் திருமணத்திற்கு என் பையனுடன் நவம்பரில் திருப்பதி போனது எனக்கு திருப்தி. பாவம் அவரின் மனைவி இன்னும் அமெரிக்கா போக முடியாமல் பாஸ்போர்ட் கிடைக்காமல் கவலையாய் இருக்கிறார்.அவர் இப்போது இருப்பது ஹைதராபாத் ஆச்சே...

10. நர்சிம்,கார்க்கி,ஆதி,கேபிள் சங்கர்,அரவிந்த், வால்பையன், சந்தனமுல்லை,ச்சின்னபையன், பட்டர்ஃப்ளை சூர்யா, இன்னும் நிறைய பதிவர்கள் அறிமுகம் கிடைத்தது சென்ற பொன்னான வருடத்தில் தான். இதில் எனக்கு மகிழ்ச்சி.இவர்களுக்கு நான் வாசகியானது இவர்களுக்கும் மகிழ்ச்சியாய் தானே இருக்கும்.

Monday, December 21, 2009

சேட்டன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ்..



இன்று 21.12.09 மாலை 6.30க்கு லாயோலா காலேஜ் ஆடிட்டோரியத்தில் தன் மனைவி,குழந்தைகள்,மாமனார்,மாமியாருடனும் சேட்டன் பகத் ஸ்ருதி ஹாசன் தலைமையில் 2 ஸ்டேட்ஸின் வெற்றியை தமிழர்கள் முன்னால்( புத்தகத்தின் பெருபான்மையாக வருவது தமிழும் தமிழ் நாடும் தான்) கொண்டாட இருக்கிறார்கள்.

சேட்டன் பகத்தின் புது நாவல் 2 ஸ்டேட்ஸ்..ஆசிரியரின் உண்மை கதை போலவே உள்ளது. 267 பக்கங்கள்-6 மணிநேரம் ஆனது படித்து முடிக்க..சேட்டன் தன் மாமனார்,மாமியாருக்கு இந்த புத்தகத்தினை டெடிகேட் செய்து உள்ளார். ஏக் துஜே கேலியே தான். ஆனால், இதில் பெண் தென்னிந்தியா, பையன் பஞ்சாபி. 2009 மசாலா தடவி கொடுத்துள்ளார். சென்னைவாசிகளை கிண்டல் செய்து இருக்கிறார். கல்யாணத்திற்கு முன்னால் இரண்டு வருடம் ஒன்றாக ஒரு ரூமில் இருக்கும் ஜோடி,கல்யாணத்திற்கு எதற்கு பெற்றோர் சம்மதத்திற்கு காத்து இருக்கணும் தெரியவில்லை. அனன்யா பீர்குடிக்கும்,நான் - வெஜ் சாப்பிடும் இன்றைய மாடர்ன் பெண். கல்யாணத்திற்கு மட்டும் பெற்றோர் சம்மதம் நாடும் கலாச்சாரம் வந்து விடுகிறது. ஆனால், இப்பொழுது இப்படி தான் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அளவிற்கு மிஞ்சி சம்பாத்தியம்.

இன்றைய இளைய தலைமுறையினறை மனதில் வைத்து எழுதப் பட்டுள்ளது. திரும்ப திரும்ப பட்டுபுடவை,இலையில் சாப்பிடுவது, நகைப் போடுவது, தலையில் பூ வைப்பது என்று கிண்டல்.ஆனால், சென்னை பெண்களை எல்லாம் ஹேமாமாலினி,ஸ்ரீதேவியுடன் கதாநாயகன் கிருஷின் அம்மா ஒப்பிடுவது நகைச்சுவை. அனன்யா தென்னிந்திய பெண் என்பதால் இவர்களை போல் வட இந்திய பையனை மயக்கிட்டாள் என்பது கிருஷின் அம்மாவின் வாதம். அனன்யா உடுத்தும் உடைகளை ஒவ்வொரு முறை விளக்கும் போதும் சேட்டன் சரியான சாரி பைத்தியம் என்று தோன்றுகிறது. அப்புறம் பஞ்சாபிகள் சாப்பாடு பிரியர்கள் என்பது தெரிகிறது.

படிக்கும் போது கீழே வைக்காமல் படிக்க தோன்றுகிறது. ஆனால், படித்து முடித்தவுடன் ஒன்றுமே இல்லாத்து போல் உள்ளது. நகைச்சுவை சேட்டனுக்கு நல்லா வருகிறது. தமிழ் வார்த்தைகள் சரி, சரி, இல்ல, இல்ல என்று நிறைய இடங்களில் seri, seri, illa, illa,, கிருஷிற்கு புரியாத தமிழ் வார்த்தைகளுக்கு something,something என்று சொல்லிவிடுவது படிக்கும் போது ரொம்ப நல்லாயிருக்கிறது.

படிக்கலாம்...மிக எளிய ஆங்கிலத்தில் இவரால் எழுதப்பட்டுள்ள இவரின் நான்காவது நாவலாகும்.

Thursday, December 17, 2009

வெரைட்டி

இதுவும் தமிழ் தான்: டேய், எங்கேடா போன? பக பக-னு வானம் வெறிச்சிடுச்சு, நீ டக் டக்-னு வந்தால், மட மட-னு வேலையை ஆரம்பித்து சட்டு,புட்டுனு அடுத்த வேலையை பார்க்கலாம். ஒருவர் செல்ஃபோனில் இப்படி டெல்லிட்டு இருந்தார் .

என்ன நடக்கும்: அழகி படம் கேடிவியில் சமீபத்தில் அழுதுக் கொண்டே பார்த்தேன். பழைய காதலி கஷ்டப்பட்டால் ஆண்கள் மனது மிக கஷ்டப் படுகிறது பார்த்திபன் போல. பழைய காதலி நல்ல பணக்காரியாக இருந்தால் பொறாமைப் படுவார்களா??? .

பஸ்ஸா நரகமா: மாயவரம் போனேன் ...சிதம்பரம்,சீர்காழி,மாயவரம் என்று பாவம்பா இந்த பஸ் கண்டக்டர்களும்,டிரைவர்களும்,என்ன ரோடு, என்ன பஸ், ஐயோ பாவம் பஸ்ஸில் பயணிப்பவர்களும் இந்த மழைக் காலத்தில் படும் பாடு. மழை பெய்யும் போது ஜன்னல் கதவுகள் மூடி இருப்பதால் காற்று இல்லை, மேலே இருந்து ஓட்டைகள் வழியே தண்ணீர் கொட்டுவதாலும் பஸ்ஸெல்லாம் தண்ணீர்...கவர்கள்,பழத் தோல்கள், பாட்டில்கள், மண் என்று கடவுளே, இந்தியர்கள் மட்டும் குப்பையை பொது இடத்தில் போடுவதை விடமாட்டார்களா??? பஸ்ஸில் வந்த 7மணி நேரமும் நரகம் மாதிரி இருந்தது.

என்ன காரணம்:பதிவர் சந்தனமுல்லையின் ப்ளாக்கை திறந்தாலே என் சிஸ்டம் நின்று விடுகிறது..என்ன காரணம்?

நல்லவரா கெட்டவரா: என் மாமா பெண்ணின் மாமியார் போன வாரம் இறந்துவிட்டார். எங்கள் யாருக்கும் கவலையாகவே இல்லை. இம்சை போனது அவளுக்கு இனிமேலாவது நிம்மதி என நினைத்தோம். நாம் மருமகளுக்கு இம்சை கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று சபதமே எடுக்க தோன்றியது. ஒருத்தர் சாகும் போது தான் தெரிகிறது அவர் நல்லவரா கெட்டவரா என்று.

ஆசிரியருக்கு கல்யாணம்: தூத்துக்குடி ஸ்பிக்கில் இருக்கும் என்.டி.டி.ஃப்-ல் டிரைனிங் ஆபிசராக பணிபுரியும் என் அத்தை பையன் மதன் கல்யாணத்திற்கு போனேன்.மண்டபம் முழுவதும் ஸ்டூண்ட்ஸ்தான். பேட்ச் பேட்சாக வந்து கலக்கிவிட்டார்கள். காலேஜும் ஹாஸ்டலும், கல்யாண மண்டபமும் ஒரே கேம்பஸில் எனவே அனைத்து மாணவர்களும் வந்து கலக்கினார்கள். மிக சந்தோஷம் அனைத்து முகத்திலும். மதன் போலியோவால் இடது கால் சிறிது பாதிக்கப்பட்டவர். மிக அன்பான ஒரு ஆசிரியர்.

ஃப்ளாட்பார்மில் ஏமாந்தோம்: தூத்துக்குடி திருமணம் முடித்து அப்படியே திருச்செந்தூர் சென்றேன். இரவு 740க்கு ட்ரைன் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு. திருச்செந்தூரில் இருந்து வரும் வழியில் தேர்தல் பிரச்சாரம் என்பதால் சுற்றி சுற்றி பஸ் வந்து ரொம்ப நேரம் ஆகி விட்டது. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ எடுத்து பறந்து வந்தோம். 738க்கு ட்ரைனில் ஏறினோம். ஃப்ளாட்பாமில் சாப்பிட ஒன்றுமே கிடைக்கவில்லை. ஸ்டேஷன் வரும் வழி எல்லாம் நிறைய பேக்கரி. ஏக்கமாய் பார்த்துக் கொண்டே வந்தேன் மெக்க்ரோனை. என் தம்பி நேரம் ஆகிவிடும் என்று என்னை ஒன்றும் வாங்க விடவில்லை.

Monday, December 07, 2009

4அரவிந்த்சாமியும்,4 மனிஷா கொய்ராலாவும்...

காஸர்கோட் அருகில் (16கிமீ)இருக்கும் பெக்கால் கோட்டைக்கு போன போது, பம்பாய் படத்தில் பார்த்து ரசித்த அந்த கோட்டை ரொம்ப சுத்தமாய் சுவர்களில் செடிகள் இல்லாமல் பச்சை குறைந்து காணப்பட்டது. 40ஏக்கர் பரப்பில் ஒரு பெரிய சாவி துவார வடிவத்தில் காணப்படும் இந்த கோட்டையினை சிவப்ப நாயக்கர் என்பவர் கட்டியதாம். ஹைதர் அலி கைப்பற்றி பின்னர் திப்பு சுல்தான் வசம் வந்து பிரிட்டிஷாரிடம் இருந்து இன்று ஆர்கியலாஜிக்கல் துறையிடம் உள்ளது. இராணுவ தளவாடங்கள் பாதுகாக்கும் கிடங்காய் இருந்து இருக்கிறது. பெரிய படிகள் கீழே செல்கின்றன. ஆனால் வழிகள் பெரிய பூட்டினால் பூட்டப் பட்டிருக்கிறது. கடலுக்கு அருகில் 130அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

கோட்டையின் நடுவில் ஒரு பெரிய டவர் போன்ற அமைப்பு 30அடி உயரத்தில் கட்டப் பட்டுள்ளது. அதில் ஏறி பார்க்கும் போது மூன்று பக்கமும் கடல், ஒரு பக்கத்தில் புல்வெளி என்று இயற்கை அழகு. கோட்டையின் வெளியில் ஒரு ஹனுமான் கோயில் உள்ளது.


கடலுக்கு அருகில் இருக்கும் ஒரு பாறையில் நின்று தான் அரவிந்த் சாமி உயிரே உயிரே என்று பாட மனிஷா அங்கிருந்து ஓடி ஓடி வருவார் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே புதியதாய் மணமான 4 ஜோடிகள் 4கேமிராமேன்களுடன் ஓடி,நடந்து,அமர்ந்து,நின்று என்று ஒரு சினிமா ஷீட்டிங் போல் காட்சிகளை சுட்டுக் கொண்டு இருந்தனர். பார்க்க தமாஷாய் இருந்தது. கூட்டம் வேறு இல்லை. எப்ப பார்த்தாலும் அந்த ஜோடிகள் தான் கண்ணில் பட்டனர். சரி என்று அந்த ஜோடிகளை அரவிந்த்,மனிஷாவாக பார்த்தோம்.

கோட்டையின் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கரா பீச் மிக அமைதியாய் குளிக்க ஏற்றதாய் இருக்கிறது. கோட்டை மிக நன்றாக பராமரிக்கப்படுகிறது. போன மாதம் சென்னையில் ஊருக்கு நடுவில் இருக்கும் வள்ளுவர் கோட்டம் போன போது அய்யோ..நான் சொல்ல மாட்டேன். போய் பார்த்து கொள்ளுங்கள்.

காஸர்கோட் சென்னை மங்களூர் ட்ரைனில் போக வேண்டும். காஸர்கோடில் நல்ல தங்கும் விடுதிகள் உள்ளன.

Wednesday, December 02, 2009

திற்பரப்பு நீர்வீழ்ச்சி



இந்த முறை திற்பரப்பு போன போது குடும்பத்துடன் தனியே குளித்தோம். நவம்பர் 26நாங்கள் போனபோது அருவியில் குளிக்க யாருமே இல்லை.தண்ணீர் மட்டும் கொட்டிக் கொண்டு இருந்தது. வருடம் முழுவதும் தண்ணீர் கூடவோ, குறையவோ செய்யுமாம். ஆனால், தண்ணீர் வரத்து எப்பவும் உண்டாம். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் குழித்துறை என்னும் ஊரில் இடது பக்கமாக திரும்பி ஒரு 24கி.மீ போனால் திற்பரப்பு. அருவி அருகிலேயே பெண்கள் குளித்து உடை மாற்ற அறைகள் சுத்தமாக இருந்தன. நாங்கள் 6பேர் மட்டும் குளித்துக் கொண்டு இருந்தோம். ஒருவருக்கு 2ரூபாய் குளிக்கக் கட்டணம். கொஞ்ச நேரம் கழித்து சிலர் வந்தனர். சென்னையிலிருந்து நாகர்கோயில்,கன்னியாகுமரி ட்ரைனில் போனால் போன அன்றே ட்ரையின் பிடித்து சென்னை திரும்பி விடலாம். சென்னையில் தண்டமாய் மாயாஜால், எம்.ஜி.எம் என்று போவதற்கு இங்கே போகலாம். அருமையான இடம். விடுமுறை தினம் என்றால் கூட்டம் இருக்கும். சாப்பிட ஹோட்டல்கள் இருக்கின்றன.