Monday, November 09, 2009

வெரைட்டி

பணம் என்னடா பணம், பணம்: கிங்ஃபிஷரின் பைலட்டான 28 வயதான மனிதர் அவரின் திருவான்மியூர் ஃப்ளாட்டில் இறந்து கிடந்தாராம். காரணம் சொந்த பந்தங்கள் யாரும் இல்லாமல் தனிமைதானாம். அம்மா கிடையாதாம். அப்பாவும் பெரிய பிசினஸ் மேன். போன மாதம் 22ஆம் தேதி இறந்து கிடந்த்வரை 4ஆம் தேதி இந்த மாதம் வாடை வந்ததால் வீட்டை உடைத்து பார்த்து உள்ளார்கள். என்ன கொடுமை இது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று சம்மட்டியால் அடித்த மாதிரி இருந்தது.

பாவம் இந்த குழந்தைகள்: பெங்களூருவில் ஐ.டியில் பணி செய்யும் ஒரு தம்பதி தங்கள் குழந்தையை பார்த்து கொள்ள ஒரு பெண்மணியை நியமித்து உள்ளார்கள். ஒரு நாள் குழந்தையின் தாய் காலை 11மணியளவில் உடல்நிலை சரியில்லை என்று வீட்டிற்கு திரும்பி உள்ளார். வேலை செய்யும் பெண்மணி டிவி பார்த்துக் கொண்டு இருக்க குழந்தையை காணோம். எங்கே என்று விசாரித்ததில் குழந்தையை அந்த வேலைபார்க்கும் பெண் தினமும் 100ரூபாய்க்கு பிச்சைக்காரருக்கு வாடகை விட்டு சம்பாதித்து இருக்கிறாள் ஆறு மாதங்களாக.......போலீசில் சொல்லாமல் குழந்தையினை மட்டும் காப்பாற்றி இருக்கிறார்கள்.

செகந்தராபாத் ஆர்மி காலனியில் வீட்டு வேலை பார்க்கும் பெண் தான் பார்த்து கொண்ட குழந்தையிடம் இருந்து மாதம் இரண்டு முறை ரத்தம் எடுத்து விற்று இருக்கிறாள்.

கோவில்பட்டியில் சண்முகா என்ற தியேட்டரில் எந்த படமானாலும் பெண்களுக்கு 10 ரூபாய் டிக்கெட். ஆண்களுக்கு 50 ரூபாய். பையனுக்கு 30 ரூபாய். கார்க்கி உங்களுக்கு ஸ்பெஷல் நியூஸ் விஜய் படம் என்றால் அந்த தியேட்டரில் பெண்களுக்கு நோ பைசா..ஃப்ரீயாம்பா......

Tuesday, November 03, 2009

Aunty அவ்வா!!!!

நான் சென்னைக்கு கல்யாணத்திற்கு பிறகு வந்த போது ரயில்வே காலனியில் பக்கத்து வீட்டில் இருந்த ஜான்சன்(ட்ரைன் கார்ட்) என்பவரும், அவரின் மனைவி எமிலி(தனியார் பள்ளி தலைமை ஆசிரியை) அவர் மகன் ப்ரேமும் வசித்து வந்தார்கள். எமிலி aunty உதவும் குணம் கொண்ட ஓரு நல்ல மனிஷி. என் பையன்கள் இரண்டு பேரும் பிறந்த போதும் அதற்கு பிறகும் அவர்கள் செய்த உதவிகளுக்கு எதுவும் ஈடாகாது. என் பையன்களை அந்த ஜான்சன் அங்கிள் அடிக்கடி தாம்பரம் மீனம்பாக்கம் வரை மாலை வேளைகளில் ட்ரையினில் அழைத்து சென்று வருவார். ஏரோப்ளேன் பார்த்த மாதிரியும் ஆச்சு, ட்ரைனில் போய் வந்த மாதிரியும் ஆச்சு. ராத்திரியில் நிம்மதியாக பசங்கள் தூங்குவார்கள்.


என் பையன்கள் இருவரும் அவர்களை aunty அவ்வா என்றே இன்றும் அழைப்பார்கள். யோசித்து பார்த்தால் யார் அப்படி சொல்ல சொன்னது என்று தெரியவில்லை. ஆனால், நான் சொல்லும் Aunty -யை ஒரு பெயர் போல பாவித்து அவ்வா(பாட்டி) என்று சேர்த்து அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு வரும் அவர்கள் சொந்தக்காரர்கள் வித்தியாசமாய் பார்ப்பார்கள் முதலில் பிறகு அவர்களுக்கு பழகிவிட்டது. அவர்கள் அனைவரும் என் பையன்கள் இருவரையும் அடிக்கடி விசார்ப்பார்கள்.

என் அம்மாவை விஜி அவ்வா என்றும் அவர்களை aunty அவ்வா என்றும் எங்களுக்கு இரண்டு அவ்வா என்று தான் என் பையன்கள் சொல்வார்கள். இப்படி சிலர் சொந்தமாக இல்லாவிட்டாலும் நமக்கு சொந்தமாகி விடுவார்கள். நிறைய பேருக்கு இப்படி வித்தியாச பெயரில் உறவுகள் இருக்கலாம். பகிர்ந்துக் கொள்ளலாமே.